
இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் அவ்வப்போது தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் முந்தைய சாதனைகள் தகர்க்கப்படும் வேளையில், புதிதாகவும் சில சாதனைகளைப் படைக்கின்றனர் இந்திய வீரர்கள். அவ்வகையில் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய வீரர்கள் பலர் அதிக ரன்களைக் குவித்துள்ளனர். இருப்பினும் சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் குறைவுதான். ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. சிக்ஸர் அடிப்பதில் கெட்டிக்காரரான இவரை ரசிகர்கள் ‘ஹிட் மேன்’ என அழைக்கின்றனர். அதற்கேற்ப ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசியவரும் இவர் தான். கடந்த 2013 ஆம் ஆண்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களை விளாசினார் ரோஹித் சர்மா. அதோடு தனது முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். ஒருநாள் போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸர்கள் இதுதான்.
அதிரடிக்குப் பெயர் போன டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்களை விளாசுவதில் இளம் வீரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் கைவசம் இருந்தால், நிச்சயமாக சிக்ஸர் மழை பொழியும். நடப்பாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா 13 சிக்ஸர்களை விளாசியதோடு, இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸர்கள் இதுதான்.
தடுப்பாட்டத்திற்கு பெயர் போன டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் சிக்ஸர் அடிப்பது கொஞ்சம் குறைவு தான். இருப்பினும் தற்காலத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் மேலோங்கி வருகிறது. ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் ரோஹித் சர்மா. கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 13 சிக்ஸர்களை விளாசினார் ரோஹித் சர்மா. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கையும் இதுதான்.
டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் மட்டும் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். கடந்த 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 12 சிக்ஸர்களை விளாசி, இரட்டை சதத்தையும் பதிவு செய்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய வீரர்கள் அதிகபட்சமாக அடித்த சிக்ஸர்கள் அனைத்துமே இந்திய மைதானங்களில் அடிக்கப்பட்டவை. இன்றைய காலகட்டத்தில் அதிரடி ஆட்டம் மேலோங்கி வருவதால், இந்தச் சாதனைகளும் வெகு விரைவில் முறியடிக்கப்படலாம் என்பது தான் கிரிக்கெட் நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.