ராஞ்சியில் நடைபெற்ற ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஜப்பானிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய மகளிர் அணியின் ஒலிம்பிக் கனவு கலைந்த்து.
போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று அணிகள் மட்டுமே 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற முடியும். ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு அணிகளும் தங்களது இடத்தை உறுதி செய்த நிலையில் மூன்றாவது இடம் யாருக்கு என்பதில் இந்தியா-ஜப்பான் அணிகளிடையே போட்டி நடைபெற்றது.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி இந்திய மகளிர் அணி ஜெர்மனியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் நூலிழையில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து ஜப்பானுடன் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை கனா உராடா, ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் போட்டார். அவர் அடித்த பந்து கோல்கீப்பர் சவீதா புனியாவையும் தாண்டி கோலுக்குள் விழுந்தது. அதன் பின் இந்திய அணியின் தீபிகா மற்றும் லால்ரெம்சியாமி இருவரும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த போதிலும் ஜப்பானின் தற்காப்பு ஆட்டத்தை மீறி கோல் போட முடியவில்லை.
இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனாலும் ஜப்பான் வீராங்கனை ஷிஹோரி ஓகாவா, உறுதியாக நின்று இந்தியாவின் முயற்சிகளை முறியடித்தார். இந்தியாவுக்கு பலமுறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்த போதிலும் ஒன்றைக்கூட கோலாக்க முடியவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் எப்படியாவது ஒரு கோல் போட்டு சமன் செய்ய இந்தியா முயன்றது. தீபிகா தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பந்தை கோலுக்கு அனுப்பினார். ஆனால், ஜப்பான் கோல் கீப்பர் இகா நகாமுரா அதை போராடி தடுத்துவிட்டார்.
இறுதிக்கட்ட ஆட்டத்திலும் இந்தியா தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்து கோல் போட முயன்றது. ஆனால், ஜப்பான் வீராங்கனைகள் ஒருங்கிணைந்து தற்காப்பு ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் முயற்சிகளை முறியடித்துவிட்டனர். இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல்கணக்கில் வென்று ஒலிம்பிக் போட்டியில் தனக்குள்ள இடத்தை உறுதி செய்தது.
தகுதிச் சுற்றில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த 2012 ஆம் ஆண்டிலும் இந்தியா தகுதிச் சுற்றில் தோல்வி கண்டது.