

பாரிஸ் ஒலிம்பிக் 2024 இறுதிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் 29 வயதான இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்(Vinesh Phogat). இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வழக்கமாக 53 கிலோ பிரிவில் போட்டியிடும் வினேஷ், பாரிஸ் விளையாட்டுக்காக 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறியிருந்தார்.
பதக்கத்தை இழந்ததால் மனம் உடைந்த வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள், சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ‘மல்யுத்தம் எனக்கு எதிரான போட்டியில் வென்றது, நான் தோற்றேன்... என் தைரியம் எல்லாம் உடைந்து விட்டது, இப்போது எனக்கு வலிமை இல்லை. விடைபெறுகிறேன். நான் என்றென்றும் உங்களுக்குக் கடன்பட்டிருப்பேன்’ என்று அவர் தனது பதிவில் எழுதினார்.
இந்த திடீர் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஹரியானாவின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார் வினேஷ் போகத். அதில் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு முடிவை மாற்றி விட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்திற்கு திரும்ப விரும்புவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகம் இதுவரை கண்டிராத தனது பயணத்தின் உயரத்தையும், தோல்விகளையும், தியாகங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு நீண்டகாலம் ஆகியுள்ளது என்றும் அதில் தன்னைப்பற்றி தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் இந்த விளையாட்டை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்றும் மீண்டும் களத்திற்கு திரும்பி போட்டியிட விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் 2028 ஒலிம்பிக் களத்தை நோக்கி அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் பயமின்றி முன்னேறுவதாக குறிப்பிட்டுள்ள வினேஷ் போகத், இந்த முறை தான் தனியாக செல்லப்போவதில்லை, தனது மகனும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், முன்னாள் ஆசிய சாம்பியன் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். மூன்று முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஆவார்.