ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இப்போது அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் கலந்துக்கொண்ட வினேஷ் போராடி ஒரே நாளில் மூன்று போட்டியாளர்களுடன் மோதி வெற்றிபெற்று வெற்றி வாகை சூடினார்.
ஆனால், அடுத்த நாளே அவருடைய எடை 50 கிராம் அதிகமானதாக கூறி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அந்த பதக்கம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று ஒலிம்பிக் நிர்வாகம் கூறிவிட்டது. இதனையடுத்து இந்தியாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அவருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். பலர் கண்டனம் தெரிவித்ததோடு, விளையாட்டு விதிகளையும் நினைவுக்கூர்ந்தனர். அதேபோல் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் விதி இதுதான் என்று சொல்லி தகுதி நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே வினேஷ் தனது 50 கிராம் எடையை குறைக்க ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல், நீர்ச்சத்து குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்படி உடலை வருத்திக்கொண்டு, நாட்டுக்காக போராடி பதக்கம் வென்றால், இறுதியில் எதோ ஒரு காரணத்தினால், தகுதி நீக்கம் செய்யப்படும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும்.
அந்த வேதனையில் மனமுடைந்துப் போன வினேஷ் தனது ஓய்வை உருக்கமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. மல்யுத்தத்துக்கு குட் பை” என்று வினேஷ் போகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இம்முறை பதக்கத்துடன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.