36 ஆண்டு கால சச்சின் சாதனையை உடைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி..!!

Vaibhav Suryavanshi
Vaibhav SuryavanshiImage credit: AI Image
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் ரசிகர்கள் கொண்டாடும் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி.

1989-ல் தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் இளவயது வீரர் சாதனை 36 ஆண்டுகளாகக் காலத்தால் அழியாததாக இருந்த நிலையில் 15 வயதான தற்போது இந்திய அணியில் இடம்பெற்ற மிக இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்று, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் பீகாரைச் சேர்ந்த இந்த இளம் வீரர்.

கடந்த ஆண்டு ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானதிலிருந்து, இவர் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். தனது முதல் ஐபிஎல் பயணத்தைத் தொடர்ந்து, இந்த இளம் வீரர் இளையோர் கிரிக்கெட்டில் எளிதாக ரன்களைக் குவித்தார். அதன் உச்சகட்டமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் எடுத்தார்.

மேலும் இடது கை பேட்ஸ்மேனான சூர்யவன்ஷி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் தனது அபாரமான ஆட்டத்திற்காக கௌரவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் 776 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.

சூப்பர் ஸ்ட்ரைக்கர், ஆரஞ்சு கேப் மற்றும் மிகவும் மதிப்புமிக்க வீரர் உட்பட மொத்தம் ஐந்து விருதுகளை அவர் வென்றார். மேலும் 2026 ஐபிஎல் தொடரில் மட்டும் 72 சிக்ஸர்களை விளாசி, கிறிஸ் கெய்லின் நீண்ட கால சாதனையை முறியடித்தார் இப்படி இவரது சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சூர்யவன்ஷி , வரவிருக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்.

வரவிருக்கும் டி20 போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, ​​தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் புறக்கணிக்க முடியாது என்றும், அந்த இளம் வீரர் தேர்வு விஷயத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேட்டியளித்துள்ளார்.

"அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். பிளேஆஃப் சுற்றுகளில்கூட, அவர் கிட்டத்தட்ட தனி ஒருவராகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தாங்கிச் சென்றார். ஒரு இளம் வீரருக்கு, அவர் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்பதைப் பற்றி நான் பேசத் தேவையில்லை," என்று அகர்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிவிக்கப்பட்டார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக, சூர்யவன்ஷி அடுத்ததாக இந்தியா 'ஏ' அணிக்காக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு எதிராகக் களமிறங்குவார் எனவும் தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி ஆம்னி பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் வரவேண்டிய கட்டாயம் இல்லை..!
Vaibhav Suryavanshi
logo
Kalki Online
kalkionline.com