ஒரு வயதிற்கு பிறகு, பெண்களுக்கு மட்டும் அனைத்திலும் கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியாது. இதில் விளையாட்டும் விதிவிலக்கல்ல. பெண்கள் முன்னுரிமைப் பெற்று, முன்னேறி வரும் காலம் இது. அவர்களுக்கு பிடித்த துறையில் தடைகளைத் தகர்த்து முன்னேறிச் செல்கின்றனர். முன்னேற நினைக்கும் பெண்களுக்கு பெற்றோர்கள் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பெற்றோர்களின் துணை இருந்தால் போதும், பெண்கள் தான் நினைத்த இலக்கு எதுவாயினும் அதனை நிச்சயமாக அடைந்து விடுவார்கள்.
நம் நாட்டில் தற்போது கால்பந்து விளையாடும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கால்பந்து விளையாடும் இந்திய வீராங்கனைகளின் எண்ணிக்கையானது தற்போது 138% உயர்ந்துள்ளது. மகளிர் கால்பந்து விளையாட்டு இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் மகளிர் கால்பந்து லீக் தொடர் தான்.
மகளிர் கால்பந்து லீக் தொடருக்கு இந்தியாவில் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த லீக் தொடரின் 2022-23 சீசனில் மட்டும் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஆகமதாபாத்தில் நடந்தன. கேரளாவைச் சேர்ந்த கோகுலம் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
மகளிர் கால்பந்து லீக் தொடர் 2023-24 இல், ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல 'உள்ளூர்-வெளியே' என்ற முறையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தத் தொடருக்கும் ரசிகர்கள் அமோகமான ஆதரவை அளித்தனர். இந்தத் தொடரில் ஒடிசா அணி இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 11,724 வீராங்கனைகள் கால்பந்து விளையாட பதிவு செய்தனர். இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 27,936 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கால்பந்து விளையாட விரும்பும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 138% உயர்ந்துள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) தலைவர் கல்யாண் சவுபே கால்பந்து விளையாட்டில் பெண்களின் வளர்ச்சி குறித்து கூறுகையில், "இந்தியாவில் புதியதாக 16,122 கால்பந்து வீராங்கனைகள் பதிவு செய்திருப்பது அதீத மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த உயர்வு பெண்கள் அணியில், கால்பந்து வளர்ச்சிக்கான திட்டம் மிகச் சிறப்பான பாதையில் செல்வதை உறுதி செய்துள்ளது.'' என்றார்.
பெண்கள் அனைத்து துறையிலும் வல்லவர்கள் தான் என்பதை அவ்வப்போது உலகுக்கு நிரூபித்து வருகிறார்கள். கால்பந்து விளையாட்டில் மகளிர் அணியின் இந்த எழுச்சி, கிராமப்பற பெண்களையும் வெகுவாக ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அனைத்துப் பெண்களுக்கும் வேரூன்றி இருக்க வேண்டும். "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" என்பதை கால்பந்து வீராங்கனைகள் நிரூபித்து விட்டார்கள்.