

இன்றைய கால கட்டத்தில் மூன்று வகை பிரிவுகளிலும் இந்திய கிரிக்கெட் அணிகளின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில் எதிர்கொண்ட அணிகள் மற்றும் நமது வீரர்களின் பங்களிப்பு குறித்து இங்கே காண்போம்.
1. முதல் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து (1932)
இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932-இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் விளையாடியது. 94 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் தடம் பதித்துவிட்டது.
கேப்டன்கள்: இந்திய அணிக்கு சி.கே. நாயுடு, இங்கிலாந்து அணிக்கு டக்ளஸ் ஜார்டின்.
அனுபவம் மிக்க இங்கிலாந்து அணியை மிரள வைத்தனர் நமது துவக்க வேக பந்து பவுலர்கள் முஹம்மது நிஸ்ஸார் மற்றும் அமர் சிங். அவர்கள் வேக பந்துக்களை எதிர் கொள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் திணறினார்கள்.கேப்டன் ஜார்டின் ( 79 ரன்கள் ) விக்கெட் கீப்பர் லீஸ் ஆமேஸ் ( 65 ரன்கள் ) தவிர மற்ற வீரர்கள் அவ்வளவாக ரன்கள் எடுக்க வில்லை.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட்.
முஹம்மது நிஸ்ஸார் 5,அமர் சிங் 2, கேப்டன் சி கே நாயுடு 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
இந்திய அணி வீரர்களுக்கு அந்த தேசத்து சீதோஷ்ண சூழ்நிலை ஒத்துப் போகவில்லை.இருந்தும் முதல் இன்னிங்சில் 189 ரன்கள் எடுத்தனர்.கேப்டன் சி.கே நாயுடு 40 ரன்கள்,துவக்க வீரர் நூமல் ஜெூமல் 33 ரன்கள், சயீத் வாசிர் அலி 31 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் வேக பந்து பவுலர்கள் பில் போவ்ஸ் 4, பில் ஓஸ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்க்சிலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் டவுகிலாஸ் ஜார்டின் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக பட்ச ரன்கள் 85* நாட் அவுட் எடுத்தார். எட்டியே பெயிண்டர் 54 ரன்கள், வால்டர் ராபின்ஸ் 30 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 275 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்திய வீரர் ஜஹாங்கிர் கான் சிறப்பாக பந்துக்கள் வீசி 4 மற்றும் அமர் சிங் 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.
வெற்றி பெற 346ரன்கள் என்ற இலக்குடன் டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸ் ஆட இந்திய அணி களம் இறங்கினார்கள்.
அனுபவம் மிக்க இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்துக்கள் வீசினார்கள்.பில் போவ்ஸ்,பில் ஓஸ்,பிரவுன் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
ஆனால் வால்லி ஹம்மோட் அருமையாக பந்துக்கள் வீசினார் மற்றும் விக்கெட்டுக்கள் அள்ளினார். 5.3 ஓவர்கள்,3 மெய்டன் ஓவர்கள்,9 ரன்கள் 3 விக்கெட்டுக்கள்.அமர் சிங் இந்திய அணிக்கான அதிக பட்ச ரன்கள் 51 எடுத்தார்.சயீத் வாசிர் கான் 30, லால் சிங் 29 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணி ஆல் அவுட் 187.இங்கிலாந்து அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த டெஸ்டில் தலா ஒரு சிக்ஸர் அடித்தவர்கள் இங்கிலாந்து அணியின் பிரவுன் மற்றும் இந்திய வீரர் அமர் சிங்.மொத்தம் நான்கு நாட்கள் இருந்த டெஸ்டில் ஒரு நாள் ஓய்வு தினம். எனவே இந்த ஆரம்ப டெஸ்ட் மூன்று தினங்களே நடைப் பெற்றது.
இங்கிலாந்து அணியில் பில் போவ்ஸ் ஒரு வீரரும் இந்திய அணியின் 11 வீரர்களும் அறிமுக வீரர்களாக இந்த டெஸ்டில் விளையாடினார்கள். இங்கிலாந்து கேப்டன் டவுகிலாஸ் ஜார்டின் அன்றைய பம்பாய் நகரத்தில் பிறந்து இந்தியாவில் சில வருடங்கள் வசித்தவர்.இவர் தான் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சர்ச்சை மிகுந்த 'பாடிலைன்' நுணுக்கங்கள் பின்பற்ற காரனமாக திகழ்ந்த கேப்டனாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிட்டதக்கது.அனுபவும் இல்லாத இந்திய கிரிக்கெட் அணி ஆரம்ப டெஸ்டில் தங்கள் திறமைகளை அயல் மண்ணில் சிறப்பாகவே வெளிப் படுத்தினர்.
2. சுதந்திர இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தொடர் - ஆஸ்திரேலியா (1947)
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆடிய முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது.
கேப்டன்: லாலா அமர்நாத்.
இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய அணியால் ஆடப் பட்ட முதல் டெஸ்ட்.இதுவும் அந்நிய மண்ணில் விளையாடப் பட்ட டெஸ்ட்.
சுற்றுப் பயணம் மேற் கொண்ட இந்திய அணி முதல் முதலாக விமானத்தில் பறந்தனர்.
முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடினார்கள்.கேப்டன் டான் பிராட்மன் வெகு சிறப்பாக ஆடி 185 ரன்கள் குவித்தார். (எதிர் கொண்ட பந்துக்கள் 336, பவுண்டரிகள் 20) பிராட்மன் ஹிட் விக்கெட் முறையில் லாலா அமர்நாத் வீசிய பந்திற்கு அவுட் ஆனார்.
கீத் மில்லர் 58 ரன்கள்,லிண்ட்சே ஹஸ்ஸட் 48 ரன்கள், ஆர்த்தூர் மொர்ரீஸ் 47 ரன்கள் சேர்த்தனர். 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 382 ரன்கள் உடன் டிக்ளர் செய்தது ஆஸ்திரேலிய அணி.இந்திய அணியின் கேப்டன் லாலா அமர்நாத் அருமையாக பந்துக்கள் வீசினார். இவர் எடுத்தது 4 விக்கெட்டுக்கள்.இவருக்கு பவுலிங்கில் துணை நின்றவர் 3விக்கெட்டுக்கள் எடுத்த வினு மன்காட்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் அவ்வளவாக சோபிக்கவில்லை.இந்திய அணி முதல் இன்னிங்சில் 58 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் 98 ரன்களுக்கும் சுருண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் எர்னி டோஷாக் (Ernie Toshack) இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 226 ரன்கள் வித்தியாசத்தில்.வெற்றியை பதிவு செய்தனர். இந்த டெஸ்டில் ஒரு ஓய்வு நாளும்,இடையில் ஒரு நாள் ஆட்டம் நடை பெறவில்லை.இந்த டெஸ்டில் கேப்டன் டான் பிராட்மன் பேட்டிங் ( 185 ரன்கள் ) மற்றும் பவுலர் எர்னே டோஷாக்கின் பந்து வீச்சம் ( 11 விக்கெட்டுக்கள் ) ஆதிக்கம் செய்தன.
3. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் டெஸ்ட் - மேற்கு இந்தியத் தீவுகள் (1948)
மேற்கு இந்திய அணியை முதன் முதலில் இந்திய அணி எதிர் கொண்ட முதல் டெஸ்ட் நடைப் பெற்றது டில்லியின் பிரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில்.இந்த டெஸ்ட் தான் சுதந்திர இந்தியாவில் நடைப் பெற்ற முதல் டெஸ்ட் ஆகும்.10-14 நவம்பர், 1948-ல் நடைப் பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய மேற்கு இந்தியத் தீவுக்கள் அணி வீரர்கள் தங்கள் அபாரமான திறமைகளை வெளிப் படுத்தினர்.
எல்லா திசைகளிலும் பந்துக்கள் சென்ற வண்ணம் இருந்தன. முதல் இரண்டு நாட்கள் முழுவதும் மற்றும் மூன்றாம் நாள் சிறிது நேரம் அவர்கள் பேட்டிங்கில் அசத்தினர்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் நான்கு வீரர்கள் சதங்கள் எடுத்தனர்.
விக்கெட் கீப்பர் கிளைதே வால்காட் 152 ( பவுண்டரிகள் 12 )
ஜெர்ரி கோம்ஸ் 101 ( பவுண்டரிகள் 07 )
எவெர்டன் வீக் ஸ் 128 ( பவுண்டரிகள் 16 )
ராபர்ட் கிறிஸ்டியனி 107
இந்திய பவுலர்களில் சி ரங்கச்சாரி 5 மற்றும் வினு மன்காட் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.அன்றைய மெட்ராஸ் வேக பந்து வீச்சாளர் சி ரங்காசாரி திறம் பட பந்துக்கள் வீசினார்.மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் ஸ்கோர் 631 ரன்கள்
எதிர் பார்த்ததை விட இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் விளையாடினார்கள்.ஹேமு அதிகாரி 10 பவுண்டரிகள் அடித்து 114* நாட் அவுட். ரன்கள் எடுத்தார்.இது இந்த டெஸ்டின் 5 வது சதம்.கே சி இப்ராஹம் 85, ருசி மோதி 63, கேப்டன் லாலா அமர்நாத் 62 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் ஸ்கோர் 454 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி கேப்டன் ஜான்cகோடார்ட் பால்லோவ் ஆன் அமுல் செய்தார்.இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடர்ந்தது.
போதிய நேரம் இல்லாத காரணத்தால் டெஸ்ட் டிராவில் முடிவு பெற்ற பொழுது இந்திய அணியின் ஸ்கோர் 220/6. கே சி கே சி இப்ராஹம் 44, ருசி மோதி 36, கேப்டன் லாலா அமர்நாத் 36, சந்து சர்வதே 35 ரன்கள் எடுத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுக்கள் அணி வீரர் ராபர்ட் கிறிஸ்டியனி எடுத்த விக்கெட்டுக்கள் 3.
இந்திய அணி 7 வீரர்கள்,மேற்கு இந்திய தீவுக்கள் அணியில் 8 மற்றும் 9 வீரர்கள் பந்துக்கள் வீசினார்கள். அந்த கால கட்டத்தில் அபூர்வமாக அடிக்கப் பட்ட சிக்ஸர்களில் இந்த டெஸ்டில் ஒரே ஒரு சிக்ஸர் அடித்தவர் இந்திய வீரர் கே சி இப்ராஹம் ஆவார்.