

ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் 100% உரிமையை வாங்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் வருமானத்தை அள்ளி கொடுக்கும் அட்சயபாத்திரமாக ஐபிஎல் திகழ்கிறது. 19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டு நிறைவடைந்த 18-வது ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது பெங்களூரு ராயல் சேலஞ்ச் (ஆர்சிபி).
கடந்த 17 சீசன்களில் ஒருமுறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத நிலையில், நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு 18-வது சீசனின் ஆர்சிபி அணி (RCB) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து, ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தபோது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதுடன் ஆர்சிபி நிர்வாகம் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அந்த சம்பவத்திற்கு பிறகு இந்த அணியின் உரிமையாளர் அணியை விற்பனை செய்ய தயாராகிவிட்டார் என்ற செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.
2008-ம் ஆண்டு பெங்களூரு அணியை ஏலத்தில் ரூ.438 கோடிக்கு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கி சில சீசன்கள் அணியை வெற்றிகரமாக நடத்தினார். பிறகு வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் மல்லையா 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றதால், பெங்களூரு அணி இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமான டியாஜியோ வசம் சென்றது.
பல பெரிய முதலீட்டாளர்கள் ஆர்சிபி மீது கண் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் தான், விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஆர்சிபி அணியை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. குரூப்பின் பார்த் ஜிண்டால், ரவி ஜெய்புரியாவின் தேவ்யானி சர்வதேச குழுமம், ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் என பல தொழிலதிபர்கள் ஆர்சிபி அணியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர்.
அதற்கு முக்கிய காரணம், ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணியை விட அதிக மதிப்பு ஆர்சிபி அணிக்கு தான் உள்ளது என்று கூறப்படுகிறது. மதிப்பு அதிகம் என்பதால் சில நிறுவனங்கள் பின்வாங்கின. இரண்டு நிறுவனங்கள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், தற்போது ஆதித்யா பிர்லா குரூப் இந்த ரேஸில் நுழைந்து அமெரிக்க நிறுவனங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கியுள்ளது. ஆர்சிபி அணியை வாங்க பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும் கடைசியில் வென்றது இந்திய தொழில்திபர் தான்.
ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ஆர்சிபி அணியை வாங்கியுள்ளது. இந்த உரிமையானது, அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மற்றும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஆகியவற்றுக்கான இந்த உரிமைகள், Diageo plc நிறுவனத்தின் துணை நிறுவனமான United Spirits Limited (USL)-இடமிருந்து வாங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆர்சிபி அணியின் மதிப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் (சுமார் 16,600 கோடி இந்திய ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுத் தொடருக்குப் பிறகு அமலுக்கு வரும் புதிய உரிமையாளர் கட்டமைப்பின் கீழ், ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குநரான ஆர்யமன் விக்ரம் பிர்லா தலைவராகவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.