நடைபெற்றுவரும் 17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.
அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். ஆட்டம் முதலே ரச்சின் ரவீந்திரா குஜராத் அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். மற்றொரு புறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ருதுராஜ். இருவரும் தலா 46 ரன்கள் எடுத்து நல்ல அடிதளமிட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த ஷிவம் துபே தனது மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 206 ரன்களை எடுத்தது.
அதைத் தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு, தொடக்கம் முதலே தனது துல்லியமான பந்து வீச்சின் மூலம் நெருக்கடி கொடுத்தது சென்னை அணி. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் சாஹா ஆகியோர் பெரிதாக ரன் எடுக்காமல் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் ராகுல் சாஹர் வீழ்த்தினார். முதல் 6 ஓவர்களுக்குள்ளேயே குஜராத் அணி இரு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இவர்களைத் தொடர்ந்து இணைந்த விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்கள் சற்று நேரம் நிலைத்து நின்று விளையாடி குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்தனர். ஆனால், 8வது ஓவரில் டேரில் மிட்ஷெல் வீசிய பந்தில் விஜய் சங்கர் தனது விக்கெட்டினை 12 ரன்கள் எடுத்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த யாரும் பெரிதாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் குஜராத் அணியால் பெரிதாக ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மடுமே எடுத்தது.
இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.