
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 17-லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுக்கட்டியது.
‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், ஜேக் பிராசரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பிராசர் ரன் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேற அடுத்து வந்த அபிஷேக் போரெல் ராகுலுடன், இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்ட போராடிய நிலையில் ஸ்கோர் 54-ஐ எட்டிய போது போரெல் 33 ரன்னில் அவுட்டானார்.
ஆனால் ராகுல் நிலைத்து நின்று ஆட , அக்ஷர் பட்டேல் 21 ரன்னிலும், சமீர் ரிஸ்வி 20 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். அதனையடுத்து அணி சவாலான ஸ்கோரை எட்ட வித்திட்ட ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 184 ரன் இலங்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திராவும், டிவான் கான்வேவும் களம் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதலே சிஎஸ்கே அணி விளையாட்டில் சொதப்ப தொடங்கியது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டெல்லி அணி அபாரமாக பந்து வீசி ரவீந்திராவை 3 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னிலும், கான்வேவை 13 ரன்னிலும் அவுட்டாக்கி வெளியேற்றியது.
பேட்டிங் தூண்கள் அடுத்தடுத்து சரிந்ததும் சிஎஸ்கே அணியின் நம்பிக்கையும் சிதைந்தது. இதன் பின்னர் வந்த விஜய் சங்கர் அணியை சரிவில் இருந்து மீட்க போராட, மறுபக்கம் இம்பேக்ட் வீரர் ஷிவம் துபே 18 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னிலும் நடையை கட்டினர்.
10 ஓவர்களில் 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் தோனி ஆட்டத்தில் நுழைந்தார். ஒரு மெகா சிக்சர் விளாசியது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது. ஆனாலும் டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசியில் விஜய் சங்கர் 69 ரன்களுடனும், தோனி 30 ரன்களுடனும் களத்தில் இருக்க, 20 ஓவர் முழுமையாக விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட்டுக்கு 158 ரன்களே மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் டெல்லி அணியிடன் சென்னை அணி சரணடைந்தது.
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். டெல்லி அணி இதன் மூலம் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.