
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 22-ம்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு கவுகாத்தியில் அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதியது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் ஆடத்தொடங்கிய ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால் 4 ரன் எடுத்து 3-வது பந்திலேயே ஆட்டமிழக்க அடுத்து சஞ்சு சாம்சனும், இடக்கை பேட்ஸ்மேன் நிதிஷ் ராணாவும் கூட்டணி போட்டு அதிரடி காட்டினர். அஸ்வின், கலீல் அகமதுவின் ஓவர்களை வெளுத்து வாங்கிய நிதிஷ் ராணா 21 பந்துகளில் அரைசதத்தை கடந்து எங்கள் அணிக்கு நான் ஒருத்தனே போதும் என்பது போல் அனைவரையும் மிரள வைத்தார்.
அணியின் ஸ்கோர் 86-ஆக உயர்ந்த போது சாம்சன் 20 ரன்களில் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து ருத்ரதாண்டவமாடிய நிதிஷ் ராணா 81 ரன்களில் அவுட்டாகி வெளியேறிய பின்னர் தான் ராஜஸ்தான் அணியின் ரன்வேகத்தை சென்னை பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.
சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டும் அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திரா 4-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற அதன் பிறகு வந்த ராகுல் திரிபாதி 23 ரன்னிலும், ‘இம்பேக்ட்’ வீரர் ஷிவம் துபே 18 ரன்னிலும், விஜய் சங்கர் 9 ரன்னிலும் வெளியேற சென்னை அணி தடுமாறத்தொடங்கியது. ராஜஸ்தான் அணி ரன் எடுக்கமுடியாத படி அபாரமாக பந்து வீசி சிஎஸ்கே அணியை தெறிக்க விட்டது.
அதனை தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்களில் அவுட்டாக அதே சமயம் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனது.
சிஎஸ்கே வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்ட போது ரவீந்திர ஜடேஜா, தோனி களத்தில் இருக்க ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் ரன் எடுக்க விடாமால் அழகாக காய் நகர்த்தினர். இதனால் நெருக்கடி மேலும் அதிகரித்த நிலையில் தோனி 16 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறியவுடன் சென்னை அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது. தோனி சிக்ஸ் அடித்தபோது மைதானம் அதிர ஆரவாரம் செய்த ரசிகர்கள் அவர் அவுட்டாகி வெளியேறியதும் சோகத்துடன் அமைதியனார்கள்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே பெங்களூருவிடமும் தோற்று இருந்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருந்த ராஜஸ்தானுக்கு முதலாவது வெற்றியாகும்.