

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ம்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் மகுடம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்தது.
2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்ரேட்டில் பின்தங்கியதால் 2-வது இடம் பிடித்தது.
தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய 3-வது அணி என்ற பெருமையை பெற பெங்களூரு அணியும், 2-வது தடவையாக கோப்பையை சொந்தமாக்க குஜராத் அணியும் கடுமையாக மல்லுக்கட்டும். மேலும் சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒட்டு மொத்ததில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 5-ல் பெங்களூருவும், 4-ல் குஜராத்தும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான பரித்தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டில் கோப்பையை வென்ற அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.12 1/2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதே பரிசுத்தொகை இந்த சீசனிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய 3-வது அணி என்ற பெருமையை பெற்றது.