ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது: குஷியான ரசிகர்கள்..!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) மார்ச் 28-ம் தேதி தொடங்கி போட்டியின் இறுதிப் போட்டி மே 31-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2026
IPL 2026
Published on

இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசன் வரும் மார்ச் 28-ந்தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக போட்டி ஆரம்பத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2 நாட்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு மே 31-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனத் தகவல் கசிந்துள்ளது.

பொதுவாக இந்த நேரத்தில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும். ஆனால் அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கான அட்டவணை அறிவிப்பு தாமதமாகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிடலாம் என பிசிசிஐ உள்ளது. அதேவேளையில் அணி உரிமையாளர்கள் பகுதி நேர அட்டவணையாவது வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிகிறது.

அந்த வகையில் திருத்தப்பட்ட தேதிகளை முறையாக அங்கீகரிக்க அடுத்த வாரம் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டப்படும். தொடக்கப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கான இடம் உள்ளிட்ட அட்டவணையை இந்தக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் மேடையில் தோனி.! சர்வதேச அரங்கில் கோலி.!
IPL 2026

ஐபிஎல் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், எந்தெந்த மைதானங்களில் எந்த அணிகளின் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறித்த முழுமையான அட்டவணை ரசிகர்களுக்காக வெளியிடப்படும்.

தேர்தல்களைத் தவிர, நடந்து வரும் டி20 உலகக் கோப்பை காரணமாக மைதானம் கிடைப்பது மற்றொரு முக்கிய கவலையாக உள்ளது. ஐபிஎல் போட்டி நடைபெறும் 10 இடங்களில், டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் தற்போது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அவற்றை ஒப்படைப்பதற்கும் தயார் செய்வதற்கும் அவர்களுக்கு நேரம் தேவைப்படும்.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பிசிசிஐ காத்திருக்குமா? அல்லது பகுதி நேர போட்டி அட்டவணை வெளியிடப்படுமா? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

மற்றொருபுறம் ஐபிஎல் மரபின்படி, முந்தைய சீசனில் வெற்றி பெற்ற அணிகள் இருக்கும் நகரத்திலேயே அடுத்த சீசனின் முதல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஐபிஎல் 2025 சீசனின் நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தான் ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி நடைபெற வேண்டும்.

ஆனால், சின்னசாமி மைதானம் குறித்த ஒரு சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கடந்த ஜூன் 4-ம் தேதி, RCBயின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சோக நிகழ்வின் காரணமாக, கர்நாடக மாநில அரசு அந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

ஆகவே, ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி பெங்களூருவில் நடக்குமா அல்லது வேறு நகரத்திற்கு மாறுமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், RCB தான் நடப்புச் சாம்பியன் என்பதால், முதல் போட்டி RCB ஆடும் போட்டியாகவே இருக்கும் என்பது மட்டும் உறுதி.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2026: RCB அணியின் புதிய ஜெர்ஸி வெளியீடு!
IPL 2026

எது எப்படியே இந்தாண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது என்ற அறிவிப்பின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் விறுவிறுப்புக்குக் குறைவில்லாத கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com