ஐபிஎல் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும்...15 வயதிலேயே அசர வைக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள்.!!

Vaibhav suryavanshi
Vaibhav suryavanshiImge credit: LatestLY
Updated on

"என்னங்க, 15 வயசுலயே இந்த அடி அடிக்கிறாரு!" என முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி கடைமட்ட ரசிகர்கள் வரை ஆச்சர்யத்துடன் இந்த 15 வயது சிறுவனை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர் தான் வைபவ் சூர்யவன்ஷி.

பீகார் மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் சமஷ்டிபூர் என்ற இடத்தில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. இவருக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்போது இவர் விளையாடி வருகிறார். இதற்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்று அதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் கால் பதித்தவர்.

சிறுவயதிலேயே இவருக்கு கிரிக்கெட் ஆர்வம் உண்டு. இவரின் தந்தை ஒரு விவசாயி. மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பதை அறிந்து வீட்டிற்கு அருகிலேயே பயிற்சி செய்வதற்கான இடத்தை அமைத்து தந்தார். இதன் பின்னர் சமஸ்டிபூர் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து 8 வயது முதலே முறையான பயிற்சி பெற்ற வைபவ் முதலில் 12 வயதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பீகார் அணியில் விளையாடினார்.

பின்னர் 2024ஆம் ஆண்டு அதாவது 13 வயதிலேயே ஐபிஎல் போட்டியில் கால்பதித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக மாறி இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளார்.

இந்த 2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 5 விருதுகளை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளார். ஒரு சீசனில் ஐந்து சாதனைகளை படைத்த முதல் கிரிக்கெட் வீரர் இவர் தான்: சீசனின் மதிப்புமிக்க வீரர் (MVP), அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி (776 ரன்கள்) வாங்கிய வீரர், வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரர் விருது, அதிக பட்ச ரன்கள் ரேட் வாங்கிய வீரர் சூப்பர் ஸ்டிரைக்கர் (237.30 ஸ்டிரைக் ரேட்), அதிக சிக்ஸர் எடுத்த வீரர் சூப்பர் சிக்ஸஸ் (72 சிக்ஸர்கள்).

தகர்க்கப்பட்ட உலக சாதனைகள்: இந்த சீசனில் 72 சிக்ஸர்களை விளாசி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை (59 சிக்ஸர்கள்) வைபவ் முறியடித்தார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் மற்றும் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட்டின் சாதனையையும் தகர்த்துள்ளார்.

தன்னுடைய திறமையால் 15 வயதிலேயே பல கோடிகளுக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. மும்பையில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வைத்திருக்கிறார். பீகார் மாநிலம் சமஷ்டிபூர் மாவட்டத்தில் அவருடைய குடும்பத்திற்கு ஒரு பாரம்பரியமான நிலம் இருக்கிறது. அதன் மதிப்பு சுமார் 40 லிருந்து 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இது தவிர ஐபிஎல் போட்டிகளுக்கான ஒப்பந்தங்கள் மூலம் இவருடைய சொத்து மதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி ரிப்போர்ட் படி 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 1.1 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியது. இது தவிர போட்டிகளுக்கான சம்பளமாக அவருக்கு 7.5 லட்சம். ஒவ்வொரு போட்டியிலும் அவர் பங்கேற்கும் போது சராசரியாக 7.5 லட்சம் ரூபாய் அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த 15 வயது சிறுவன் இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த வகையில் மொத்தமாக போட்டிகளில் பங்கேற்றத்தின் மூலம் மட்டும் அவருக்கு 1.65 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி முடிவின்போது சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக டாடா நிறுவனம் இவருக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான டாடா கர்வ் ஈவி காரை பரிசாக தந்தது அடுத்தது ஒரு பென்ஸ் காரும் பரிசாக வழங்கப்பட்டது. இது தவிர பீகார மாநில அரசு இவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி கௌரவித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் பல்வேறு விளம்பரங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் சுமார் 7 லிருந்து 10 கோடி ரூபாய் வரையிலான சொத்து மதிப்பு கொண்டவராக வைபவ் சூர்யவன்ஷி மாறி இருக்கிறார். இந்த 10 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் அவருடைய திறமைக்கு கிடைத்த ஒரு வருமானமாக மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சாதனை நாயகனாக வளர தொடங்கி இருக்கிறார்.

அவரது அசுர வளர்ச்சி காரணமாக, பேட் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், பல பெருநிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம்காட்டுகின்றன. இதில், நாட்டின் முன்னணி டயர் பிராண்டுகளும் அடங்கும். இந்த இளம் வீரருக்கு, பேட் ஸ்பான்சர்ஷிப்பிற்காக ஆண்டுக்கு ₹12 கோடி என்ற மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆர்வமுள்ள ஒரு ஸ்பான்சர், அவரை ஒப்பந்தம் செய்ய வெற்றுச் செக்கையும் வழங்க முன்வந்திருப்பதாகத் தகவல்கள். இந்த ஒப்பந்தம் நிஜமானால், கிரிக்கெட்டின் விளம்பர உலகில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
பந்து வீசுவதற்கு முன்பே தோற்கும் பவுலர்கள்... வைபவின் ரகசியம் இதுதான்!
Vaibhav suryavanshi
logo
Kalki Online
kalkionline.com