

இன்று இருக்கும் பெரிய பெரிய பவுலர்கள் எல்லாம் பந்து வீசவே பயப்படுகிறார்கள் என்றால், அந்த பேட்ஸ்மேன் யார்? என்கிற கேள்வி எழுவதற்கு வாய்ப்பில்லை. காரணம் அனைவரும் அறிந்த பதில் தான், அந்த பேட்ஸ்மேன் பெயர் வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Suryavanshi) என்று. 15 வயது மட்டுமே நிரம்பிய அந்த சிறுவனின் ஆட்டத்திற்கு எதிரணி கதி கலங்கி போய் நிற்கும்.
சிங்கிள் ரன் எடுப்பதெல்லாம் அந்த சிறுவனுக்கு பிடிக்காது வைபவின் ஆட்டம் மைதானத்தில் நுழைந்த உடனேயே, முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை, ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் அனுப்புவது மட்டும் தான். அதைப்போல் ஒரு மேட்ச்க்காக நீண்ட நேரமும் அல்லது நிதானமும் அவருக்கு தேவைப்படாது. 30 பந்துகளில் அசால்டாக 50 ரன்கள் எடுப்பது தான் வைபவின் இயல்பான ஆட்டம்.
சமூக வலைதளங்களில் வைபவின் சிறு வயதை வைத்து சில மீம்ஸ்கள் வெளிவருவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் எந்த ஒரு மீம்ஸ்களிலும் அவரது ஆட்டத்தை கிண்டல் செய்ததில்லை. இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப, எந்த ஒரு பந்தையும் பார்த்து அந்த சிறுவன் பயந்தது இல்லை. ஒரு காலத்தில் அதிரடிக்கு பெயர் போனவர்கள் பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரீதியும், இந்தியாவின் யுவராஜ் சிங்கையும் ஒப்பிடுவார்கள்.
ஆனால், வைபவ் சூரியவன்ஷியின் அதிரடிக்கு யாருடனும் ஒப்பிட முடியாது. பந்து வீச்சாளரின் கை அசவை வைத்து பந்து எந்த இடத்திற்கு வரும் என்பதை யூகிக்க வைபவினால் முடியும். அதனால்தான் ஒவ்வொரு பந்தையும் விடாமல் அவரால் சிதறடிக்க முடிகிறது.
வைபவ் சூரியவன்ஷியின் கிரிக்கெட் மீதான ஆர்வம் 4 வயதில் இருந்தே தொடங்கியுள்ளது, அவரின் கிரிக்கெட் ஆர்வம் ரத்தத்தில் கலந்துள்ளது. அவரது அப்பா சஞ்சீவ் சூர்யவன்ஷியும் சிறந்த கிரிக்கெட் வீரர் தான். கிரிக்கெட்டின் மீது வெறித்தனமாக அவர் இருந்தாலும், பீகாரில் இருந்ததால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தான் கிரிக்கெட் விளையாட 100 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணம் செய்த அவர், தன் மகன் வைபவிற்கு அவ்வளவு கஷ்டத்தினை கொடுக்கவில்லை. அவருக்காக ஒரு பழைய ஸ்கார்பியோ கார் வாங்கி, தினமும் 100 கிலோ மீட்டர் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். மற்ற சிறுவர்கள் 200 பந்துகளை ஒரு நாளில் எதிர்கொண்டால், வைபவ் மட்டும் 600 பந்துகளை எதிர் கொண்டார் என்று அவரது பயிற்சியாளர் ஓஜா கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுகமாகி, பின்னர் U19 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார் வைபவ். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்களை விளாசி கிரிக்கெட் ரசிகர்களை அன்றே தன் வசப்படுத்தினார் வைபவ். இந்த போட்டிக்கு முன்னரே, 2023 ஆம் ஆண்டே ராஜஸ்தான் அணி அவரை தங்கள் அணியில் சேர்க்க முடிவு செய்துவிட்டது.
2025 ஐபிஎல் ஏலத்தில் மிக குறைந்த வயதில் ஐபிஎல் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் 72 சிக்ஸர்கள் அடித்து, இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். இந்த தொடரில் அதிக ரன்களை (776) குவித்ததில் முதலிடத்திலும் இருக்கிறார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் பந்துவீச்சாளர்களை மிரளச் செய்யும் வகையில் 237 ஆக உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இந்த ஐபிஎல் தொடரை ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய ரசிகர்கள் எப்பொழுது வைபவ் சூரியவன்ஷி தேசிய அணிக்காக விளையாடுவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.