வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் ருதுராஜ் கெய்ட்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டூப்ளஸி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளியும் சாதனை மன்னன் விராட் கோலியும் ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அதிரடியைக் காட்டத் தொடங்கினர். டூப்ளிசி 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ரஜத் பட்டிதார் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து அட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தனர்.
அதையடுத்து, விராட் கோலியும் கேமரூன் கிரீனும் சற்று நிதானமாக ஆட, அந்தக் கூட்டணியையும் பிரித்தார் சென்னை அணியின் பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான். அதைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் இணைந்து சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 95 ரன்களை தங்கள் அணிக்காகச் சேர்த்தனர். இந்த இருவரின் பார்ட்னர்ஷிப்பே பெங்களூரு அணிக்கு நல்ல ஒரு ஸ்கோர் ஆக அமைந்தது. அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் தரப்பில் முஸ்தாபிசூர் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் முதன் முறையாக விளையாடும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர். ருதுராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து ரஹானே 27, மிட்செல் 22 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து ஆட வந்த ஷிவம் துபே மற்றும் ஜடேஜா ஜோடி இணைந்து பொறுப்புடன் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பலனாக 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது சென்னை அணி. ஷிவம் துபே 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 17 பந்துகளில 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது.
ருதுராஜ் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே வெற்றியை கண்டிருக்கிறார். வரும் 26ம் தேதி நடைபெறும் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.