

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு, பரஸ்பர பரிமாற்றம் நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன.
இதற்கிடையே கழற்றிவிடப்பட்ட மற்றும் புதிய வீரர்கள் என 1,390 பேர் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்த நிலையில், இறுதி ஏலப்பட்டியலில் 369 பேர் இடம் பிடித்தனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் (IPL Mini Auction)ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்தது. இந்த ஏலத்தில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 29 வெளிநாட்டவர், 48 இந்தியர் என மொத்தம் 77 வீரர்கள் ரூ.215.45 கோடிக்கு விற்கப்பட்டனர்.
ஐபிஎல் மினி ஏலத்தில் விற்பனையான வீரர்களும், வாங்கிய அணியும்...
* ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் 26 வயதான கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி தட்டிச் சென்றது. ஐபிஎல் ஏலம் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பை கிரீன் 2024 ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக 13 ஆட்டங்களில் ஆடி 255 ரன்களும், 10 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
* முதல் வீரராக ஏலம் போன தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது.
* யார்க்கர் பந்து வீசுவதில் வல்லவரான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி சொந்தமாக்கியது.
* இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
* ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிசின் ரூ.8.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தட்டிதூக்கியது.
* வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா அணியில் இணைகிறார்.
* சென்னை அணி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை ரூ.2 கோடிக்கு வசப்படுத்தியது.
* இந்திய வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயை ரூ.7.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
* வெங்கடேஷ் அய்யரை ரூ.7 கோடிக்கு நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கின.
* சென்னை அணி வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹூசனை ரூ.2 கோடிக்கும், சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹரை ரூ.5.20 கோடிக்கும் வாங்கியது.
* உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.
* விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் போட்டி போட்டு தனதாக்கியது.
* வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான ஆகிப் நபியை ரூ.8.4 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
* மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் மங்கேஷ் யாதவை ரூ.5.2 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.
* சையத் முஷ்டாக் அலி தொடரில் அசத்தி வரும் சர்ப்ராஸ்கானை அடிப்படை விலையான ரூ.75 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது.
இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், நியூசிலாந்தின் டிவான் கான்வே, டேரில் மிட்செல், இலங்கையின் தீக்ஷனா, ஆப்கானிஸ்தானின் முஜீப் ரகுமான், ரமனுல்லா குர்பாஸ், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப், தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டர், இந்தியாவின் தீபக் ஹூடா, மயங்க் அகர்வால் உள்பட 292 வீரர்கள் விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.