சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனிக்கு அடுத்தபடி யாரு சார்? யோசித்தோமா?

Wicket Keeper
MS Dhoni
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அதற்கேற்ப 5 முறை கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது சென்னை. ஆனால் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, சரியான கேப்டனை தேர்வு செய்ய முடியாமல் சென்னை அணி தவித்து வருகிறது. இதனால் வெற்றிகளின் எண்ணிக்கை குறைந்து, தோல்விகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் தலைமையில் சென்னை அணி வெற்றிகளை குவிக்கத் தவறி விட்டது. இந்நிலையில் காயம் காரணமாக ருதுராஜ் விலகியதால், மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார் தோனி. நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது சென்னை அணி. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சீசனில் பலத்துடன் திரும்புவோம் என தோனி ஏற்கனவே தெரிவித்தார். ஆனால் அதற்கு ஏலத்தில் திறம்பட செயல்பட வேண்டும்.

ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி திறமையான வீரர்களை வாங்கவில்லை என்பதே உண்மை. மாறாக அனுபவ வீரர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்தது சென்னை அணி நிர்வாகம். ஏனெனில் இதற்கு முன் அனுபவ வீரர்கள் தான் கோப்பையை வென்று கொடுத்தனர். இருப்பினும் இப்போதும் அது எடுபடாது என்பதை சென்னை அணி புரிந்து கொண்டிருக்கும். தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது தெரியவில்லை. அவருக்குப் பிறகு கேப்டனை தேடிக் கொண்டிருந்த சென்னை அணி, விக்கெட் கீப்பரை மட்டும் தேடவில்லை.

ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷன், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட விக்கெட் கீப்பர்களை வாங்க சென்னை அணி ஆர்வமே காட்டவில்லை. தோனி இருக்கும் போது எதற்கு அவர்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். இந்நிலையில், தோனிக்குப் பிறகு யார் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் என்ற கேள்வியை சமீபத்தில் எழுப்பினார் சுரேஷ் ரெய்னா.

சென்னை அணியின் தோல்வி குறித்து ஆதங்கப்படும் ரெய்னா, கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரை தேடும் பணியில் சென்னை அணி துடிப்பாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் அதிக டாட் பால்களை விளையாடுகின்றனர். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்காததால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகிறது. ரவீந்திர ஜடேஜா நான்காவது வீரராக களத்திற்குள் வருகிறார் என்றால், சென்னை அணியின் பேட்டிங் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

பேட்டிங்கை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கிறது. அதற்கு இனி வரும் ஆட்டங்களையாவது சென்னை வீரர்கள் அதிரடியாக ஆட வேண்டும். தோனியின் விக்கெட் கீப்பிங்கில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்‌. இருப்பினும் தோனிக்கு அடுத்து யார் என்ற கேள்வி அனைவருக்குமே எழுந்துள்ளது. அடுத்த ஐபிஎல் ஏலத்திலாவது சென்னை அணி நிர்வாகம், சரியான வீரர்களை ஏலத்தில் எடுப்பார்களா? தோனியைப் போல் விவேகமான ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சென்னை அணிக்கு கிடைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
தோனி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - கேப்டனாக உருவெடுத்த விக்கெட் கீப்பர்!
Wicket Keeper

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com