"பயிற்சியாளர் பதவிக்கு ஏற்றவரா கம்பீர்?" ஆண்டி ஃபிளவர் கேள்வி!

Gautam Gambhir
Gautam Gambhir
Published on

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ள நிலையில், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃபிளவர் மட்டும் கம்பீர் எப்படி பயிற்சியாளர் ஆனார் என ஐயத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதைத் தீர்மானிக்க பிசிசிஐ பல மாதங்களாக பரிசீலித்து கவுதம் கம்பீரை நியமித்தது. கம்பீர் களத்தில் ஆக்ரோஷமான வீரராக செயல்பட்டவர் என்பதால், இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

கவுதம் கம்பீர் இதற்கு முன்னதாக எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருந்ததில்லை. இருப்பினும் லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு ஐபிஎல் அணிக்கு மெண்டராக செயல்பட்ட அனுபவம் மட்டுமே அவரிடத்தில் இருந்தது. எந்தவித அனுபவமும் இல்லாத கம்பீரை எப்படி பிசிசிஐ பயிற்சியாளராக நியமித்தது என இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுமான ஆண்டி ஃபிளவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டி ஃபிளவர் மேலும் கூறுகையில், "பயிற்சியாளருக்கு உரிய எவ்விதப் பணியையும் கம்பீர் இதுவரை செய்ததில்லை. பயிற்சி அமர்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும்? பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற எந்த முன் அனுபவமும் இல்லாத ஒருவர் எப்படி பயிற்சியாளர் பதவிக்கு சரியாக இருப்பார்! இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சிறந்த தலைவராக இருக்கும் அத்தனைத் தகுதிகளும் கம்பீருக்கு இருக்கிறது. இருப்பினும் பயிற்சியாளர் பதவிக்கு போதிய அனுபவம் இவரிடத்தில் இல்லை. தன்னுடைய அணி எந்த மாதிரியான விளையாட்டை விளையாட வேண்டும் என்ற தெளிவான சிந்தனை இருக்கலாம். ஆனால், தலைமைப் பயிற்சியாளருக்கு அது மட்டுமே போதாது.

தனியார் அணிக்கும், சர்வதேச அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறுகிய காலத்திற்கு மட்டுமே உதவும் தனியார் அணிகளின் செயல்பாட்டைக் கொண்டு, தேசிய அணிக்குச் சாதகமாக முடிவெடுப்பது சரியாக இருக்காது. கம்பீரால் அனைத்தையும் செய்ய முடியாது. இவருக்கு உதவி பயிற்சியாளர்கள் தேவை. இந்தத் தருணத்தில் முஷ்டாக் அகமது கூறிய மிகச் சிறந்த வாசகம் நினைவுக்கு வருகிறது. 'பயிற்சியாளர் தந்தையைப் போன்று கண்டிப்புடன் இருப்பார்; உதவி பயிற்சியாளர் தாயைப் போல் அரவணைப்பைக் காட்டுவார்.' இது முற்றிலும் சரியே" என ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு தருவாரா கவுதம் கம்பீர்?
Gautam Gambhir

கம்பீரின் அனுபவத்தை பிசிசிஐ கணக்கில் கொள்ளவில்லை. இந்திய அணியின் வருங்கால வளர்ச்சிக்கான இவரது திட்டங்கள் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையால் தான் இன்று கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அடுத்து வர இருக்கும் ஐசிசி தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை ஆகியவை கம்பீருக்கு சவாலான ஒன்றாக இருக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com