இந்தியாவின் FIFA 2026 கால்பந்து கனவு களவாடப்பட்டுவிட்டதா?

FIFA 2026 Soccer
FIFA 2026 Soccer

- மதுவந்தி

சமீபத்தில் நடந்த இந்தியாவிற்கும் கத்தாருக்குமான FIFA 2026 உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் கத்தாருக்குச் சாதகமாக வழங்கப்பட்ட கோல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேத்ரியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி என்ன ஆகும் எனக் கேள்வி ஒருபுறம் இருக்க, அடுத்த சுற்றுக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பு பறிபோனது எல்லோரையும் சோகமடைய செய்துள்ளது.

தோஹாவில் நடைபெற்ற, இந்தியா-கத்தாருக்கு இடையேயான போட்டியில் இந்தியாவின் லல்லியன்சுவாலா சாங்டே முப்பத்தேழாவது நிமிடம் ஒரு கோல் போட, இந்திய அணி முன்னிலை வகித்தது. ஆனால் எழுவத்திமூன்றாவது நிமிடம் கத்தாரின் யூசுப் அய்மன் அடித்த கோல் தான் இப்பொழுது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெளியே சென்றுவிட்டது என நினைத்து இந்திய அணி கோல்கீப்பரும் மற்ற வீரர்களும் பந்தினை விட, கத்தார் வீரரான யூசுப் அய்மன் அதனை இழுத்து கோல் அடித்துள்ளார். இதனைப் போட்டியின் நடுவரான தென் கொரியாவைச் சேர்ந்த கிம் வூ-சங் கோலாக அறிவிக்க, இந்திய வீரர்களுக்கும் நடுவருக்கு வாக்குவாதம் நடந்துள்ளது. ஆனால் போட்டியின் விதிப்படி நடுவரின் தீர்ப்பே இறுதியானது, அதனால் கத்தாருக்கு அந்த கோல் கொடுக்கப்பட்டது.

1 - 1 என்ற சமநிலையிலிருந்த இரண்டு அணிகளும் தொடர்ந்து மோத கத்தாரின் அகமது அல்-ரவி எண்பத்தைந்தாவது நிமிடத்தில் அடுத்த கோலினை அடிக்க கத்தாரின் வெற்றி உறுதியானது. இதனால் இந்திய அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோனது. அப்படி அடுத்த சுற்றுக்கு போயிருக்கும் பட்சத்தில் இதுவே இந்திய அணி தகுதி போட்டி சுற்றிற்குச் செல்லும் முதல் முறையாக இருந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
பாகிஸ்தான் அணியைப் பார்த்து கை கொட்டி சிரித்த விராட், ரோஹித்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!
FIFA 2026 Soccer

போட்டியைப் பார்த்த ரசிகர்கள் நடுவர் செய்தது சரியில்லை, அது ஏமாற்றுவதற்குச் சமமாக இருக்கிறது என தங்கள் சமூக ஊடகங்களின் பதிவிட்டுள்ளனர்.

போட்டி முடிந்து பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் "இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாகவே விளையாடினார்கள். அவர்களைக் குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள், நமது அணியை நினைத்து பெருமைப்பட வேண்டும். மேட்சை மீண்டும் பார்த்த பிறகு தெளிவாகவே தெரிகிறது பந்து வெளியே சென்றுவிட்டது என்று. ஆனாலும் அதனைக் கோல் என அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது கத்தார் அணிக்கு நடந்திருந்தாலும் அதையே தான் கூறுவேன். இந்த ஒரு கோல் ஆட்டத்தையே மாற்றிவிட்டது. வீரர்களைப் பார்க்கும் பொழுது பாவமாக இருக்கிறது. இத்தனை நாட்களாக ஒரு கனவினை நோக்கிப் போகும் வீரர்களின் கடின உழைப்பை இந்த மாதிரி ஒரு நிகழ்விலிருந்து காப்பாற்றமுடியாமல் போனதற்கு."

இந்த தோல்வியையடுத்து ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட தகுதி சுற்றின் இறுதியில் இந்திய அணி குரூப் A வில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் 121வது இடத்தில் உள்ளது. சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு போட்டிகளுக்கு இந்திய அணி ஒருமுறை கூட தகுதி பெறவில்லை என்பது கூடுதல் வேதனையளிக்கிறது. இனி வரும் காலங்களில் இந்த நிலை மாறுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com