ஒலிம்பிக் வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்பதால், அவர்களே சமைத்து உண்கிறார்கள் என்றும், அதேபோல் குத்துச்சண்டை வீரர்கள் மேகி சாப்பிடுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு அரோக்கியமான உணவுகள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது குத்துச்சண்டை வீரர்களுக்கு மேகி சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேர் பங்கேற்றிருக்கிறார்கள். இதில் நான்கு பேர் பெண்கள். இதுவரை நடந்த குத்துச்சண்டை போட்டியில் அமித் மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் தொடர்ந்து வெளியேறியுள்ளனர்.
இந்த ஆறு வீரர்களுக்கும் மூன்று பயிற்சியாளர்கள் ஒரு பிசியோ மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் உடன் சென்றிருக்கிறார்கள்.
இந்த ஆறு வீரர்களும் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், குத்துச்சண்டை சமநிலை நிர்வாகிகள் சுமார் 25 பேர் அங்குச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில்தான் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 100டாலர் வழங்கப்படுகிறதாம். இதைவைத்து இரண்டு வேளைக்கு உணவு வாங்கமுடியவில்லை என்று குத்துச்சண்டை நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. பாரிஸில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாகவும், ஆகையால் ப்ரெட், மேகி ஆகியவற்றை வாங்கி சமைத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குத்துச்சண்டை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காலை உணவு மட்டுமே ஹோட்டலில் தரப்படுகிறது என்றும், மதியம் மற்றும் இரவு வேளைக்கு இந்த மேகியை வாங்கி சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலில் 7 பேர் கொண்ட குத்துச்சண்டை குழு அங்கு சென்றது. ஆனால், வெறும் நான்கு பேருக்கு மட்டுமே ஒலிம்பிக் கிராமத்தில் இடமளிக்கப்பட்டது. மீதமுள்ள மூவரும் ஹோட்டலில்தான் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்திலிருந்தே இதுபோல நிறைய சொதப்பல்கள் குறித்து அவ்வப்போது வெளிவந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மற்றவை எதுவானாலும் சரி, ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதே உணவுதான். இது சரியாக இல்லையென்றால், போட்டியில் சொதப்பல் ஏற்பட்டு அவரவர்களின் நாட்டிற்கே பதில் அளிக்கும் நிலைமை வீரர்களுக்கு ஏற்பட்டுவிடும் என்பதுப்பற்றி யாருக்குமே கவலை இல்லையா?