நீண்டகாலமாகவே கால்பந்துக்கு பெயர்போன நாடான இத்தாலி, தற்போது கிரிக்கெட் அரங்கிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இத்தாலி ஆண்கள் கிரிக்கெட் அணி, முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
2026ம் ஆண்டில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா, இலங்கை அணிகளுடன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் கடந்த உலகக் கோப்பை பெர்பார்மென்ஸின் அடிப்படையில் தகுதி பெற்றன. மேலும் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகியவை தரவரிசையில் முன்னேறியுள்ளன.
ஐரோப்பாவில் கிரிக்கெட் அவ்வளவாகப் பிரபலமாக இல்லாத போதிலும், இத்தாலி அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக முன்னேறி வந்தது. தகுதிச் சுற்றுகளில், அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக இத்தாலி அணி துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஒருங்கிணைந்த செயல்பாடு, இளம் வீரர்களின் அபாரமான திறமை, மற்றும் பயிற்சியாளரின் அர்ப்பணிப்பு ஆகியவையே இந்த வரலாற்றுச் சாதனைக்கான காரணங்களாகும். முக்கியமான போட்டிகளில் நெருக்கடியான சூழல்களை திறம்பட கையாண்டு, தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று, தங்கள் உலகக் கோப்பை இடத்தை உறுதிப்படுத்தியது இத்தாலி அணி.
இந்த வெற்றி, இத்தாலி கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது அந்நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை மேலும் தூண்டி, இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகக் கோப்பைப் போட்டியில், கிரிக்கெட்டின் ஜாம்பவான் அணிகளுடன் மோதி, இத்தாலி அணி தங்கள் திறமையை வெளிப்படுத்தப் போவது, உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி கிரிக்கெட் வட்டாரம், இந்த வரலாற்றுச் சாதனைக்காக அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், உலகக் கோப்பைப் போட்டியில் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து ஆதரவையும் அளிக்கும் என உறுதியளித்துள்ளது. ஒட்டுமொத்த இத்தாலி மக்களும் தங்கள் அணியின் இந்த சாதனையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். உலகக் கோப்பையில் இத்தாலி அணி மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என நம்பப்படுகிறது.
இத்தாலியின் இந்த சாதனை, அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், உலக கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.