சிஎஸ்கே அணி நேற்றைய ஆட்டத்தில் தோற்றுப்போன நிலையில், கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்துவிட்டதாக முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. ஷிவம் துபேவின் சிறப்பான அரைசதம் (50 ரன்கள்) மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத அரைசதம் (53 ரன்கள்) ஆகியவற்றின் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது.
ஆனால், மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் அவர்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளனர். அதே சமயம், இந்த தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 8 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை அணியின் ப்ளே ஆஃப் கனவு மிகவும் கடினமாகியுள்ளது. மீதமுள்ள போட்டிகளில் அவர்கள் அபாரமான வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே சிறு வாய்ப்பு உள்ளது.
இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். அதேபோல் மும்பை அணி ரசிகர்கள் சென்னை ரசிகர்களை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பந்தை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்க விட்டதைப் பார்த்தது விருந்தாக அமைந்தது.
மீதமுள்ள ஆட்டங்களுக்காக சி.எஸ்.கே அணிக்கு என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் நீங்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி விளையாட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.