தற்போது பலரும் அபார்ட்மெண்டில் தான் வசித்து வருகிறார்கள். செடிகள் வளர்க்க இடம் இருப்பதில்லை. இடம் இருந்தாலும் செடிகளை முறையாக பராமரித்து வளர்க்க பலருக்கும் நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. ஆனால் சில வகையான தாவரங்களை மிகக் குறைந்த பராமரிப்பிலேயே நல்ல முறையில் வளர்க்கலாம்.
வீட்டு பால்கனியில் இருக்கும் சிறிதளவு இடமே போதும். சில வகையான செடிகளை அருமையாக வளர்க்கலாம். அவை வீட்டிற்கே தனி அழகையும் தருவதோடு கண்களுக்கும் குளிர்ச்சியாக இருக்கும். புத்துணர்ச்சியையும் தரும். பால்கனியில் வைத்து வளர்க்க ஏற்ற செடிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது ஒரு வாசனை மிகுந்த பசுமையான செடியாகும். ஊசி போன்ற இலைகளைக் கொண்ட ஒரு மூலிகைத் தாவரம். இதைத் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். இந்த மூலிகை புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தண்டுகள் மேல் நோக்கி அல்லது சாய்வாக வளரக்கூடியவை. இலைகள் பசுமையாக இருக்கும். இதன் பூக்கள் கோடையிலும் பல்வேறு நிறங்களில் பூக்கும். இந்தப் பூக்கள் மென்மை இளஞ்சிவப்பு ஊதா நீலம் போன்ற நிறங்களில் இருக்கும். இதன் இலைகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உகந்தவை.
பூஜைக்கு பயன்படுத்தப்படும் புனித துளசி அதன் மூலிகைத் தன்மைக்கும் மருத்துவ குணத்திற்கும் பெயர் போன ஒரு தாவரமாகும் .இது மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. துளசி இலைகள் சுவாமிக்கு மாலை கட்டிப் போட மட்டுமல்லாமல் தலைவலி, சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது. ஆயுர்வேத மருந்துகளில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
பால்கனி தோட்டங்களின் முக்கியத் தாவரம் புதினா. பசுமை நிறத்தில் பார்க்க அழகாக இருப்பதுடன் நல்ல நறுமணம் கொண்ட இந்த செடியை வளர்க்க விரும்பினால் ஒரே ஒரு புதினாத் தண்டை வேருடன் தொட்டியில் நட்டு வைத்தாலே போதும். இலைகள் துளிர்க்க ஆரம்பித்து விரைவில் நன்கு செழித்து வளரும். இவற்றைக் கொண்டு தேநீர் தயாரிக்கலாம். சூப்புகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
கொத்தமல்லி விதைகளைக் கீறி ஈரமான மண் தொட்டியில் தூவி விட்டாலே சில நாட்களில் சின்ன துளிர்கள் முளைத்து, விரைவில் கொத்தமல்லி செடிகள் உருவாகிவிடும். ரசத்திற்கு வீட்டு பால்கனியிலிருந்து ஃபிரஷ்ஷாக பறித்து உபயோகித்துக் கொள்ளலாம். நறுமணத்துடனும் பலவிதமான மூலிகைக் குணத்தையும் கொண்டது.
மணி பிளான்ட் அநேகமாக எல்லோர் வீட்டிலும் இருக்கும் ஒரு தாவரம் ஆகும். இது குறைந்த சூரிய வெளிச்சத்திலும் மிகக் குறைவான நீரிலும் தாக்குபிடித்து வளரக்கூடிய தாவரம் ஆகும். ஒரு மணி பிளான்ட்டின் தண்டை வேருடன் ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் கூட அது விரைவில் பெரிதாக வளர்ந்து கொடி போல படர்ந்து விடும்.
கற்றாழையும் சிறிதளவு நீர் மற்றும் சூரிய வெளிச்சத்தில் நன்கு செழித்து வளரக்கூடிய ஒரு தாவரமாகும். மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு தாவரம். இதனுடைய ஜெல் முகம், சரும அழகிற்காகவும் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் நன்கு பயன்படுகிறது.