இலங்கை அணிக்கு ஏற்றம் தந்த ஜெயசூர்யா!

Head Coach
Srilankan Team
Published on

கிரிக்கெட்டில் உலக நாடுகளுக்கு நிகராக விளையாடும் அணிகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், முத்தையா முரளிதரன், மகிளா ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்கக்காரா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களின் இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் கிடைக்காமல் இலங்கை அணி தள்ளாடி வந்தது. இந்நிலையில் இலங்கை அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடுகிறார் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா. இவர் பொறுப்பேற்ற பின் இலங்கையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த இலங்கை அணியால் ஐசிசி தொடர்களில் கூட எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனது. 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம், 2014 டி20 உலகக்கோப்பையில் வெற்றி என கம்பீரமாக இருந்த இலங்கை அணியா இது என முன்னாள் வீரர்களும், அந்நாட்டு ரசிகர்களும் கவலையில் இருந்தனர்.

இலங்கை அணியில் ஒருசில வீரர்கள் நன்றாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் சொதப்பி வந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் முன்னேறி வர முடியவில்லை. இருப்பினும், தசுன் சனகா தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றது தான் இலங்கையின் சமீபத்திய நல்ல செயல்பாடு. அதன் பிறகு மீண்டும் தோல்வியின் பிடியில் சிக்கிக் கொண்ட இலங்கை, சிறிய அணிகளுக்கு எதிராகவே போராடி தான் வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும் சில நேரங்களில் தோல்வியையும் ஏற்றுக் கொண்டது. இப்படியான சூழலில் தான் இலங்கை அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா பொறுப்பேற்றார். இவரது வருகைக்குப் பின் இலங்கை அணியின் செயல்பாட்டில் சிறுசிறு முன்னேற்றங்களைக் காண முடிந்தது.

ஜெயசூர்யாவின் பயிற்சியின் கீழ், இந்தியாவுக்கு எதிரான இருதரப்புத் தொடரை 27 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றி, வெற்றிப் பாதைக்கு திரும்பி பிள்ளையார் சுழி போட்டது இலங்கை அணி. சொந்த மண்ணில் இந்தியாவை வென்றதன் மூலம் இலங்கை அணியின் நம்பிக்கை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்ற இலங்கை, டெஸ்ட் தொடரை இழந்திருந்தாலும் வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்தது. அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்று சாதனைப் படைத்தது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்ப்பது என்பது மிகவும் அசாத்தியமான ஒன்றாகும். இருப்பினும் இலங்கை அணி தனது முழுபலத்தையும் பயன்படுத்தி 3வது டெஸ்ட் போட்டியை வென்றது.

இதையும் படியுங்கள்:
இவரின் கிரிக்கெட் மூளையை நான் மதிக்கிறேன்: ஆஸ்திரேலிய வீரர்!
Head Coach

அதன் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இலங்கை. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது இலங்கை. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் அட்டவணையில் 5வது இடத்திற்கு இலங்கை முன்னேறியது. இலங்கை அணியின் இந்தத் தொடர் எழுச்சிக்கு காரணம் பயிற்சியாளர் ஜெயசூர்யா தான் என இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதியாக நம்புகிறது. இதனால் தற்காலிக பயிற்சியாளராக இருந்த ஜெயசூர்யாவை, தற்போது முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இலங்கை அணி. இந்தத் தொடரில் இருந்து முழுநேர பயிற்சியாளராக ஜெயசூர்யா செயல்பட உள்ளார். இவரது பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயசூர்யாவின் தலைமையின் கீழ் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் இலங்கை அணி, ஐசிசி தொடர்களிலும் சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com