
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.இந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியாவை எதிர்கொள்கிறது. டிச.15 (நேற்று) ஞாயிற்றுக் கிழமை அன்று நவி மும்பையில் உள்ள Dr.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகடமியில் இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியினர் மோதும் போட்டிகள் தொடங்கின. ஆஸ்திரேலிய தொடரில் மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி இம்முறை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு விளையாடியது. ஸ்மிருதி மந்தனாவும் உமா செத்ரியும் (24) முதலில் களமிறங்கி மே.இந்திய அணியின் பந்துகளை விளாசத் தொடங்கினர். ஸ்மிருதி(54) 33 பந்துகளில் 7 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் பறக்க விட்டு அரை சதம் அடித்தார். மறுபுறம் அவரும் ஜெமிமாவும் ஜோடி சேர மே.இந்திய அணியின் பந்துகளை துவைத்து காயப்போட்டனர். அதுவும் ஜெமிமாவின் பேட் ஆடுகளத்தில் அதகளம் செய்தது.
35 பந்துகளில் 9 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் விளாசி தள்ளினார் ஜெமிமா. 73 ரன்கள் எடுத்த ஜெமிமா ரன் அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களும் சிறிது அடித்து ஆட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. மே.இந்திய தீவுகள் அணி சார்பில் கரிஷ்மா 2 விக்கெட்டுகளையும் டீன்டிரா டாட்டின் 1 விக்கெட்டையும் எடுத்தார்.
பேட்டிங்கிற்கு களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி தொடக்க வீராங்கனை ஹேலி மாத்யூ ஆரம்பத்தில் 1 ரன்னுடன் வெளியேறினார். மறுபுறம் கியானா ஜோசப் அடி வெளுக்க ஆரம்பித்தார். 3 சிக்சர்களை அவர் பறக்க விட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த டீன்டிரா 3 சிக்சர்க்களை பறக்க விட்டதுடன் இல்லாமல் இந்திய அணியின் பந்துகளை 4 பக்கமும் சிதற விட்டார். ஆட்டம் மே. இ.தீவுகள் அணியின் வசம் சென்று கொண்டிருந்தது.
கியானாவும்(49) டீன்டிராவும்(52) ஆட்டம் இழந்த பின் அந்த அணி வீரர்கள் தடுமாற தொடங்கினர். அடுத்து வந்தவர்கள் வேகத்தை அடியோடு குறைக்க மே.இந்திய தீவுகள் அணி தத்தளிக்க ஆரம்பித்தது. மே. இ. அணி வீரர்கள் ஒவ்வொருவாக வரிசையாக ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவரில் 146/7 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் சார்பின் டைட்டஸ் சாது 3 விக்கட்டுகளையும் , தீப்தி மற்றும் ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்தியா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அதிரடியாக ரன்கள் குவித்து வெற்றிக்கு வழி வகுத்த ஜெமிமா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி வரும் செவ்வாய்கிழமை அன்று அதே மைதானத்தில் நடைபெறும். நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி இந்திய அணியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.