

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கபில் தேவ், இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். கபில்தேவின் எச்சரிக்கையில் வைபவின் எதிர்காலம் குறித்த அக்கறையும் கவலையும் தெரிந்தது. இந்திய அணியின் முன்னேற்றத்தில் எப்போதும் கவனம் செலுத்தும் கபில்தேவ், இந்திய அணியை வெற்றிகரமான அணியாக மாற்றியவர். ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி என்பதையே அபூர்வமாக பெற்ற இந்திய அணியை, ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல வைத்த ஜாம்பவான் கபில்தேவ்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் எப்பொழுதும் முதன்மையான இடத்தில் இருப்பவர் கபில் தேவ். சிறந்த கேப்டனாக மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் அவர். பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய சாதனைகளை செய்து இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியவர். கபில்தேவ் வளர்ந்து வரும் இளம் வீரரான சூரியவன்சியின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை இப்போதே கிரிக்கெட்டின் அடுத்த நாயகனாக கொண்டாடுவதை நிறுத்துங்கள், வைபவ் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதும், அவரிடம் அபார ஆட்டம் உள்ளது என்பதிலும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அவரை இப்போது கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடாதீர்கள். கிரிக்கெட்டில் ஒருவர் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும். கிரிக்கெட்டில் பெரிய திறமையுடன் அறிமுகமாகி விரைவாக காணாமல் போனவர்கள் ஏராளமாக உள்ளனர், அதற்கு வினோத் காம்ப்ளி ஒரு உதாரணம்.
வைபவிற்கு இன்னும் திறமையை வெளிப்படுத்துவதற்கு நேரம் இருக்கிறது. அவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு காலமாவது அவகாசம் கொடுங்கள். அதன் பின்னர் அவரது பெருமையைப் பற்றி பேசலாம். ஒருவருக்கு வயதாகும் போது அவரது வாழ்க்கை முறை மாறும் , அவரது சிந்தனையும் மாறும். அந்த மாற்றங்களை எல்லாம் ஒருவர் எவ்வாறு சமாளித்து வெளி வருகிறார் என்பதை பொறுத்து அவரது எதிர்காலம் இருக்கும். இப்போதைக்கு வைபவின் அதிரடி ஆட்டத்தை விட , அவருக்கு பக்குவமே வேண்டும். என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா , அடிக்கடி காயத்தில் சிக்குவது பற்றியும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இடைவெளி எடுக்காமல் தொடர்ச்சியாக அணி வீரர்கள் போட்டியில் பங்கேற்கும் போது காயங்களை தவிர்க்கலாம் என்று கபில்தேவ் கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான பந்து வீச்சினால் உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா சாதித்துள்ளார் என்று கபில்தேவ் பாராட்டியுள்ளார்.
90- களின் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியில், சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் கடுமையான போட்டியாக கருதப்பட்டவர் வினோத் காம்ப்ளி. அன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதி விரைவாக, 14 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பினை பெற்றிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக பேட்டிங் சராசரியை கொண்டவர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.
ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பான முறையில் ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக கிரிக்கெட்டில் சரிவை சந்தித்தார். விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல்வேறு பணிகளை செய்தும், எதிலும் முன்னேறாமல் துயரத்தில் இருக்கிறார். அது போன்ற சூழ்நிலைகள் வைபவிற்கு வரக்கூடாது என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.