ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை!

Kapildev Advice
Kapildev Advice
Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என்றால், அது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் தொடர் தான். தேசத்திற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே பல விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் இலட்சியமாக இருக்கும். வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை 33 வது ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெற இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வகையில் பல இந்திய வீரர்கள் கடுமையாக உழைத்தனர். இருப்பினும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 117 இந்திய வீரர்கள் தான் தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 121 வீரர்கள் பங்கேற்றனர். நடப்பாண்டில் இந்திய விளையாட்டு வீரர்களுடன் 140 துணைப் பணியாளர்களும் பாரீஸூக்குச் செல்கின்றனர். கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, இம்முறை தங்கப் பதக்கத்தை கைப்பற்றி மீண்டும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முதலில் உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான கபில்தேவ். இவர் தற்காலத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தற்போது இவர் கோல்டு டூர் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஒலிம்பிக் செல்லும் வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் கனவை அடைவதற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு தருவாரா கவுதம் கம்பீர்?
Kapildev Advice

“பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க காத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்களுக்கான போட்டியில் எதைக் கண்டும் அஞ்சிடாமல் துணிச்சலாக செயல்படுங்கள். உங்கள் திறமையை நிரூபிக்க களம் கிடைத்து விட்டது‌. ஒலிம்பிக் போட்டியில் எல்லாமே சரியாக நடந்தால் கடந்த முறையைக் காட்டிலும், இந்தமுறை அதிக பதக்கங்களை வெல்ல முடியும். இம்முறை இரட்டை இலக்க எண்ணில் பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என கபில்தேவ் கூறியுள்ளார்.

மேலும் இவர் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீருக்கு வாழ்த்துகள். இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் சிறப்பான உயரத்தை இந்திய அணி அடைய கம்பீர் துருப்புச் சீட்டாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com