அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பாரம்பரிய கட்டைக்கால் ஆட்டம் மறுமலர்ச்சி பெறுமா?

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பாரம்பரியக் கலையை காக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?
kallaattam
கொக்கலி ஆட்டம் கட்டக்கால் ஆட்டம் S pictures
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் மிகவும் முக்கியமானது கொக்கலி ஆட்டம் என்று அழைக்கப்படும் கட்டைக்கால் ஆட்டம் ஆகும். இது கழியலாட்டம், கழலடி, கல்லாட்டம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. உலகம் வேகமாக மாறிவரும் சூழலில் பாரம்பரியமிக்க பல கலைகள் அழிந்து வருவதைப் போல , கொக்கலி ஆட்டமும் தற்போது பெருமளவில் மறைந்து விட்டது. திருவிழாக்களில் பிரம்மாண்டத்தை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஆட்டம் தற்போது மிகவும் அரிதாகி விட்டது.

​கலைஞர்களின் கால்களில் மரத்தாலான கட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆடப்படுவதால் இது ‘கட்டைக்கால் ஆட்டம்’ என்றழைக்கப்படுகிறது. கால்களில் கட்டைகளை கட்டிக்கொண்டு நிற்கும் போது கொக்கை போன்று உயரமாக இருந்து ஆடுவதால் இதை ‘கொக்கலி ஆட்டம்’ என்றும் அழைக்கின்றனர். இது போன்ற காரணங்களின் அடிப்படையில் கழியலாட்டம், கழலடி, கல்லாட்டம் போன்ற பெயர்களும் இந்த கலைக்கு வந்தது. மக்களின் வட்டாரத்திற்கு தகுந்தவாறு இதன் பெயர்கள் மாறி உள்ளன.

திருவிழாக்களில் கரகாட்டம், மயிலாட்டம் , தெருக்கூத்து போன்ற கலைகளை கூட்டத்திலிருந்து பார்ப்பது மிகவும் கடினமான செயலாக இருக்கும். ஆனால் ,கட்டைக்கால் ஆட்டம் திருவிழாக்களில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் இருக்கும். காரணம் கலைஞர்கள் தங்களது கால்களில் ஆறடி உயர கட்டைகளை கட்டிக்கொண்டு நடனம் ஆடுவதால், ஊர்வலமாக வருவதால் கூட்டத்தில் இருக்கும் பொதுவான பார்வையாளர்களும் எளிதில் இந்த நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முடியும்.

இந்த ஆட்டத்தின் போது நடன கலைஞர்கள் தங்கள் கால்களில் 3 அடி முதல் 6 அடி வரை உயரமான கட்டைகளை கட்டிக் கொள்வார்கள். இதனால் கலைஞர்கள் மிகவும் உயரமாக தெரிவார்கள். திருவிழாக்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும்போது , மேடைகளில் நிறுத்தப்படும் கலைகளை மட்டுமே பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். காண்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் , இந்த ஆட்டத்திற்கு பின்னால் கலைஞர்களின் வலியும் இருக்கிறது.

Kokkali attam
Banna TribesTik tok

மூன்றடி முதல் ஆறடி வரை கட்டைகளை காலில் கட்டிக் கொள்வதால், அவர்களால் தரையிலோ அல்லது நாற்காலிகளிலோ அமர முடியாது. சில நேரங்களில் காலில் கட்டப்பட்டுள்ள கட்டைகள் நழுவினாலோ, அல்லது அசைவின்போது விலகினாலும் அடிபடும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் அவர்களின் சமநிலை தவறினால் கீழே விழும் வாய்ப்புகளும் அதிகம் , உயரத்திலிருந்து தடுமாறுவதால் அதிக காயங்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. இவ்வளவு சிரமங்களையும் தாண்டி அவர்கள் மக்களை மகிழ்விப்பதற்காக தங்களை கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தை தாண்டி பல்வேறு நாடுகளிலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கட்டைக்கால் ஆட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவின் எத்தியோப்பிய நாட்டில் உள்ள பன்னா எனப்படும் பழங்குடியினர் , எப்போதும் தங்களது கால்களில் கம்பங்களை கட்டிக்கொண்டு நடமாடுகின்றனர். இந்த வழக்கத்தை அவர்கள் பல நூற்றாண்டு காலமாக பின்பற்றுகின்றனர்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மற்ற கலைகளை காட்சிப்படுத்துவது போல் , கட்டைக்கால் ஆட்டத்தை அதிகம் காட்சிப்படுத்தியது இல்லை. ஆனாலும், இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் வரும் அழகான ராட்சசியே பாடலில் கட்டக்கால் ஆட்டத்தை காட்சிப்படுத்தியிருப்பார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் பெரும்பாலான கிராமக் கோவில் திருவிழாவிலும் கட்டைக்கால் ஆட்டம் தவறாமல் இடம்பெறும். கிராமியச் சடங்குகளில் கட்டைக்கால் கலைஞர்களின் வருகை திருவிழாவிற்கு அலாதியான களை கட்டும். ஆனால், தற்காலத்தில் இக்கலை பெருமளவில் அழிந்துவிட்டது. இருப்பினும், தமிழ்நாட்டில் சிவகங்கை , திருநெல்வேலி , வேலூர் , கன்னியாகுமாரி உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள பாரம்பரியக் கலைஞர்கள் இக்கலையைத் தங்கள் உயிராக மதித்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்து வருகின்றனர்.