
தடகள வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவள் அந்தப் பெண். அவரது தந்தை 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர், மற்றும் அவரது சகோதரி 10 கிமீ மற்றும் அரை மராத்தான் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.15 வயதாகும் போது தான் விளையாட்டை தனது வாழ்க்கைப் பாதையாக மாற்ற பயிற்சி எடுக்கத் தொடங்கினார் அந்தப்பெண்.
அவர் 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பைட்கோஸ்ஸில் நடந்த உலக கிராஸ் கண்ட்ரி ஜூனியர் பந்தயத்தை வென்றார். 2011 உலக U18 மற்றும் 2012 உலக U20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் சாம்பியன் பட்டங்களையும் வென்றார்.
2013 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவில் அறிமுகமானார், ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு, அவர் நான்கு முறை உலக விளையாட்டு மேடையில் இடம் பிடித்துள்ளார். இரண்டு முறை உலக சாம்பியனாக (2017 மற்றும் 2022 இல்) வென்றார். ரியோ 2016 ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
இத்தனையும் தனது 31 வயதிற்குள் ஒரு குழந்தைக்கு தாயான அந்தப் பெண் சாதித்தார். அவர் தான் பெய்த் செப்னெஜெடிக் கிப்யேகன் (Faith Chepngetich Kipyegon) (பிறப்பு: 10 ஜனவரி 1994) கென்யாவைச் சேர்ந்த நடுத்தர மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை.
இவர் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (ரியோ 2016, டோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024) 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே பெண்மணி ஆவார். கிப்யேகன் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்று முறை உலக சாம்பியனாக முடிசூட்டப்பட்டது மட்டுமல்லாமல், 2023 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடந்த போட்டியில், 5000 மீட்டர் தங்கத்தையும் வென்று இரட்டைப் பக்கத்தையும் பெற்றார்.
2018 இல் தனது மகள் அலினைப் பெற்றெடுக்க 24 வயதில் ஒரு இடைவெளி எடுத்த பின்னர், அவர் ஒரு தாயான பிறகு இரண்டு ஒலிம்பிக் மற்றும் மூன்று உலக சாம்பியன்ஷிப் தங்கங்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு இந்த கென்யா வீராங்கனைக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருந்தது. 50 நாட்களுக்குள் மூன்று போட்டிகளில் மூன்று உலக சாதனைகளை முறியடித்து அவர் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார். இத்தாலியின் புளோரன்சில் நடந்த டயமண்ட் லீக் போட்டியில், 3:49.11 மணிக்கு, பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓடி உலக சாதனையை ஃபெய்த் முறியடித்தார்.
பாரிஸில் நடந்த டயமண்ட் லீக் போட்டியில், 5,000 மீட்டர் ஓட்டத்தில் 14:05.20 நேரத்தில் ஓடி புதிய உலக சாதனையை படைத்தார். இருப்பினும், இந்த சாதனையை எத்தியோப்பியாவின் குடாஃப் செகே பின்னர் 14:00.21 நேரத்தில் கடந்து முறியடித்தார். தனது குறிப்பிடத்தக்க ஓட்டத்தைத் தொடர்ந்து, மொனாக்கோவில் நடந்த டயமண்ட் லீக் போட்டியில் 4:07.64 நேரத்தில் ஒரு மைல் உலக சாதனையை முறியடித்தார்.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 1,500 மீட்டர் மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் வெற்றி பெற்று, உலக அளவில் இந்த இரட்டை வெற்றியைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக தடகள வீராங்கனையாக அவர் பெயரிடப்பட்ட போது அவரை விளையாட்டு உலகமே வியந்து பார்த்தது.
இதெல்லாம் போதாதென்று, 2025 ஜூன் மாதத்தில் நைக் நடத்திய பிரேக்கிங் 4 என்ற மிகவும் பரபரப்பான நிகழ்வில் நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் ஓடிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற முயற்சித்தார். ஆனால், முடியவில்லை 0.7 நொடிகளில் அதை தவறவிட்டார். இருப்பினும் இன்றைய நிலவரப்படி, கிப்யேகன் தான் ஒரு மைல் (4:07.64) மற்றும் 1500 மீ (3:48.68) ஆகிய இரண்டிலும் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இது பற்றி பத்திரிகையாளர்கள் "அடுத்த தலைமுறை உங்களை மதிக்கும் வகையில் நீங்கள் இன்னும் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்" என்பதற்கு கிப்யேகன் கூறியது,
"என்னைப் பொறுத்தவரை, நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் ஓடிய முதல் பெண்மணியாக இருப்பதே எனது இலக்காக இருந்தது. நான் செய்ய விரும்பியதை நான் செய்யவில்லை. அது ஒரு நாள், ஒரு முறை சாத்தியம், அது என் வழியில் வரவில்லை என்றாலும், அது ஒரு நாள் செய்யப்படும். அதை செய்தவர் யாரோ ஒருவராக இருப்பார்கள் அது உறுதி. ஒரு நாள், அடுத்த தலைமுறையிலோ அல்லது நம் தலைமுறையிலோ நான்கு நிமிடங்களுக்குள் ஓடும் ஒரு பெண் இருப்பார்."