
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாளன்று உலக கொசு நாள் (World Mosquito Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரித்தானிய மருத்துவர் சர்.ரொனால்டு ராஸ் என்பவர், 1897ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் நாளில், பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பிற்குப் பின்னர் இந்நாளை, ‘உலக கொசு நாள்’ என்ற பெயரில் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற பலர் ஆகஸ்ட் 20ம் நாளை, ‘உலக கொசு நாள்’ என்று கடைப்பிடிக்கத் தொடங்கினர். தற்போது, இந்நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கொசு என்பது குளுசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். 'கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. 'கொசுகு' என்பது இதன் பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் 'சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றை 'கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் 'சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை 'நுளம்பு' என்று வழங்குகின்றனர்.
கொசுக்கள் மெல்லிய உடல் கொண்டவை. இவற்றுக்கு ஓர் இணை இறக்கைகளும், மூன்று இணை நீண்ட கால்களும் இருக்கின்றன. வீடுகளிலுள்ள கொசுக்கள் தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும். அதற்காக, அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கின்ற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.
பொதுவாக, ஆண் கொசுக்கள் தாவரச் சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும் என்றாலும், பெண் கொசுக்களுக்குக் கூட இரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசு இரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப இரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.
கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூட பயணம் செய்கின்றன. ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே வாழக்கூடியவை. ஆண் கொசுக்கள் முட்டையிலிருந்து வாழ்க்கைச் சுழற்சியின் மூலம் மூதுயிரியாக வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கின்றன. கலவி முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக் கொண்டு காலம் கழிக்கிறது.
பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிடும். ஒரு வேளையில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டி விடுகிறது.
கொசு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு குருதியை அகத்துறிஞ்சும்போது தனது உமிழ் நீரை இரத்தத்தினை உறிஞ்சும் இடத்தில் பாய்ச்சும். இதனால் இதன் நுண்ணிய குழலுக்குள் குருதி செல்ல ஏதுவாக குருதியின் அடர்த்தி குறைவதோடு, குருதி உறைதலும் தடுக்கப்படுகிறது.
கொசு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் கொசு இனத்தின் பெண் கொசுக்களே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. மலேரியா என்னும் கொடிய தொற்று நோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்கருவியாக இருக்கின்றன.
ஒரு பெண் கொசுவிடமிருந்து நமது உடம்பை மறைக்கவே இயலாது. கொசுக்கள் பார்வை, ஒலி மற்றும் வாசனைக் குறிப்புகளைப் பயன்படுத்தி ரத்தத்தின் சாத்தியமான மூலத்தைக் கண்டறியும். இரவில் மட்டுமே சுற்றிவரும் பெரும்பாலான கொசு இனங்கள் மனிதனிடமிருந்து வரும் வாசனைகளை மட்டுமே நம்பியுள்ளன. மனிதர்கள் உட்பட அனைத்து முதுகெலும்பிகளும் ஒவ்வொரு சுவாசத்தின்போதும், அவற்றின் தோல் வழியாக வெளியிடும் கரியுமில வாயுதான் (Co2), கொசுவின் மிக முக்கியமான ரசாயனக் குறியீடாகும். கொசுக்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு (Co2)க்கு மிகவும் நெருக்கமான உணர்திறன் கொண்டவை. பல மீட்டர் தொலைவில் உள்ள Co2 மூலத்தை அவற்றால் எளிதாக உணர முடியும்.
கொசுவின் உணர்கொம்பு மற்றும் கால்களில் உள்ள ஏற்பி செல்கள் Co2 மூலக்கூறுகளை பிணைத்து மூளைக்கு மின் சமிக்ஞையை அனுப்புகின்றன. அதிக மூலக்கூறுகள் அவற்றின் ஏற்பிகளைத் தாக்கும்போது, அதிக CO2 செறிவு இருந்தால் அவர்கள் கொசுவுக்கு மிக நெருக்கமாக இருப்பார்கள். கார்கள், படகுகள், விமானங்கள் மற்றும் தொடருந்துகள் போன்ற பல உயிரற்ற பொருள்களும் கரியுமில வாயு மூலங்களை வெளியிடுகின்றன.
ஆனால், CO2ன் உயிரற்ற மூலங்களிலிருந்து, உயிரி மூல ஆதாரத்தைப் பிரிக்க, கொசுக்கள் உயிருள்ள விலங்குகள் உருவாக்கும் இரண்டாம் நிலை வாசனைக் குறிப்புகளை நம்பியுள்ளன. சுவாசம் மற்றும் நகர்தல் போன்ற வளர்சிதை மாற்ற செயல்முறைகள் இந்த வாசனை குறிப்புகளை உருவாக்குகின்றன. இதில் லாக்டிக் அமிலம், அமோனியா மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கூடுதல் வாசனைத் துப்புகளாக செயல்படுகின்றன.
அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதத்தின் காரணமாக கருவுற்ற பெண்களை அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் கடிக்கின்றன. ஒருவரின் ரத்த வகை, ரத்த சர்க்கரை அளவு, பூண்டு அல்லது வாழைப்பழங்களை உட்கொள்வது, ஒரு பெண்ணாக இருப்பது மற்றும் குழந்தையாக இருப்பது போன்ற அனைத்தும் தவிர, அவர் விரும்பி உண்ணும் சிற்றுண்டி கூட அவரைக் கொசு கடிப்பதற்குக் காரணியாக இருக்கலாம் என்பதற்கான பிரபலமான கோட்பாடுகள் உள்ளன. ஆனாலும் கூட இன்னும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, நம்பத் தகுந்த தரவுகள் இல்லை என்று ராக்ஃபெல்லரின் நரம்பியல் - மரபணு மற்றும் நடத்தை (Neurogenetics and Behavior) ஆய்வகத்தின் தலைவர் லெஸ்லி வோஷால் கூறுகிறார்.