

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 60-வது லீக் போட்டியில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.
கொல்கத்தா 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 9 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி கண்டு 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், கொல்கத்தா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களை குவித்தது. இதில் சிறப்பாக ஆடிய ஃபின் ஆலன் 35 பந்துகளில் 10 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசினார்.
மெகா இலக்கான 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே போராடிய போதிலும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் கொல்கத்தா அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.