
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கே எல் ராகுல் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தை பிறக்கும் சமயத்தில் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை விளையாடுவதை கே.எல்.ராகுல் தவிர்த்துவிட்டார். இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல், ஓபனிங், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர்.
கடந்த 2019-ல் கே.எல். ராகுல் தனது நண்பர் மூலம் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை சந்தித்த போது இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு பல ஆண்டுகள் டேட் செய்த நிலையில், 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி கடந்தாண்டு நவம்பர் மாதம் கர்ப்பமாக இருப்பதை இண்டாகிராமில் "எங்கள் அழகான தேவதை விரைவில் வருகிறது. 2025" என்று பதிவிட்டு அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 24-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் அறிவித்தனர்.
கே.எல். ராகுலின் 33வது பிறந்தநாளில், நட்சத்திர கிரிக்கெட் வீரரும் அவரது மனைவி அதியா ஷெட்டியும் தங்கள் மகளின் பெயரை வெளியிட்டனர். அதன்படி, தனது மகளுக்கு ‘இவாரா’ என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புடன், ராகுல் தங்கள் மகளை தனது கைகளில் அணைத்துக் கொண்டிருக்கும் படத்தையும், அதியா அவளை அன்பாகப் பார்க்கும் படத்தையும் அவர்கள் வெளியிட்டனர். 'இவாரா' என்பதற்கு 'கடவுளின் பரிசு' என்பது அர்த்தமாகும்.
தனது மகளின் பெயரான ‘இவாரா விபுலா ராகுல்’ என்பதன் முக்கியத்துவத்தை அறிவிக்கும் வகையில் அதியா ஷெட்டி இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ளார். 'இவாரா' என்பது ஒரு தெய்வீக பரிசைக் குறிக்கிறது என்றும், 'விபுலா' என்பது தனது கொள்ளு பாட்டியைக் கௌரவிக்கிறது என்றும், 'ராகுல்' தனது தந்தையின் மரபை பெருமையுடன் சுமந்து செல்கிறார் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.