
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான பதிவின் மூலம் இருவரும் அறிவித்தனர். ‘Blessed with a baby girl’ என்ற வாசகத்துடன் ஒரு போட்டோவை அவர்கள் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கே எல் ராகுல் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தை பிறக்கும் சமயத்தில் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை விளையாடுவதை கே.எல்.ராகுல் தவிர்த்துவிட்டார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே எல் ராகுல் முக்கிய பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கேப்டனாக அக்சர் படேல் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கே எல் ராகுல் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒரு வீரராக மட்டுமே ஆட இருக்கிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், விரைவில் அணியில் இணைவார் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி கடந்தாண்டு நவம்பர் மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். அந்த போஸ்டில்,"எங்கள் அழகான தேவதை விரைவில் வருகிறது..." என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தச் சூழலில் தான் அந்த ஜோடிக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) இடையேயான கடுமையான ஏலப் போருக்குப் பிறகு, டெல்லி கேபிடல்ஸ் (DC) அதிரடியில் இறங்கி, தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் மற்றும் ஆல்ரவுண்டரான ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல், ஓபனிங், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர்.
இந்தியாவின் ICC சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கே எல் ராகுல் 2024-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றபோது ராகுல் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் களம் இறங்கி விளையாடினார். ஏனெனில், அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்க அக்சர் படேலை ஐந்தாவது இடத்தில் வைக்க அணி விரும்பியது. நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியின் போது நெருக்கடியான சூழ்நிலையில் ராகுல் 33 பந்துகளில் 34* ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கை வகித்தார். ஐந்து போட்டிகள் மற்றும் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி, ராகுல் 140.00 சராசரி மற்றும் 97.90 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 140 ரன்கள் எடுத்தார், சிறந்த ஸ்கோர் 42* ஆகும்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கேஎல் ராகுல், 132 போட்டிகள் மற்றும் 123 இன்னிங்ஸ்களில் 134.60 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 45.46 சராசரியுடன் 4,683 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் நான்கு சதங்கள் மற்றும் 37 அரைசதங்களை அடித்துள்ளார், சிறந்த ஸ்கோர் 132* ஆகும். இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் எல்எஸ்ஜி அணிக்காக விளையாடியுள்ள இவர், இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ல் கே.எல். ராகுல் தனது நண்பர் மூலம் அதியாவை சந்தித்த போது இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு பல ஆண்டுகள் டேட் செய்த நிலையில், 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.