

ஒரே டெஸ்டில் நியூசிலாந்தின் ஓபனர்கள் லாதம் மற்றும் கான்வே சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் இவர்கள் பேட்டை சுழற்றிய விதம் இந்த அசாத்திய சாதனைக்கு வழி வகுத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் தொடக்க வீரர்கள் என்ற பெருமையை டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே ஜோடி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி கான்வே 227 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 137 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 420 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியில் கவேம் ஹாட்ஜ் சதம் அடித்து 123 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. லாதம் மற்றும் கான்வே இருவரும் சதம் அடித்து அசத்தினர். 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்த பொழுது டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. பிரண்டன் கிங் 37 ரன்கள், கேம்பெல் 2 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் லாதம் & கான்வே சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
டெஸ்ட் அரங்கில், ஒரே போட்டியில் இரட்டை சதம், சதம் விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார் கான்வே. சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டிய 10வது வீரரானார். பிரையன் லாரா, சுனில் கவாஸ்கர், குமார் சங்கக்காரா போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலில் கான்வே இணைந்துள்ளார்.அத்துடன், ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ஆறாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இப்படி பந்துகளை பறக்க விட்ட கான்வேவை சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பே விடுவித்து இருந்தது. ஐபிஎல் மினி ஏலத்தில் கூட கான்வேவை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பனது குறிப்பிடத்தக்கது