

கர்நாடக மாநிலத்தில் விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. கர்நாடக ஒலிம்பிக் அசோசியேசன் சார்பாக நேற்று பெங்களூருவில் ‘கர்நாடகா ஒலிம்பிக் - 2025’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் என்றால் ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வதே சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் தங்கப் பதக்கம் என்றால் அது மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படும்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் செல்லும் கர்நாடக வீரருக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகையை அறிவித்து, விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் முதல்வர் சித்தராமையா.
கர்நாடகா ஒலிம்பிக் - 2025 விருது விழாவில் பேசிய சித்தராமையா, “விளையாட்டுத் துறைக்கு கர்நாடகா அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இளைஞர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில், காவல் துறையில் 2% மற்றும் வனத்துறையில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு வீரர்களை மேலும் ஊக்கப்படுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும். மேலும் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
கடினமாக உழைத்து இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதி இருந்தால் நிச்சயமாக விளையாட்டு வீரர்களால் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்ல முடியும். விளையாட்டில் இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைவதை வாழ்க்கையின் இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். கர்நாடகா வீரர்கள் நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வார்கள் என நான் முழு மனதார நம்புகிறேன்” என முதல்வர் கூறினார்.
கடந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வென்றது. அதேபோல் கடந்த 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.
கடந்த 2020 இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி நடராஜன் (நீச்சல்), ஃபுவாட் மிர்சா (குதிரையேற்றம்) மற்றும் அதிதி அசோக் (கோல்ஃப்) ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பதக்கத்தை வெல்லவில்லை என்றாலும், ஒலிம்பிக் அரங்கில் கர்நாடகாவை பெருமைப்படுத்தினர்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கவிருக்கிறது. இந்தத் தொடர் இத்தாலியில் உள்ள மிலானோ கோர்ட்டினா என்ற நகரத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் 2028 ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் தொடர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.