நடந்து முடிந்த ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய வீரர்களை இந்திய மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்று தான் கூற வேண்டும். இதற்கு முன்பாக நடந்து முடிந்த ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, குஜராத் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை ரூ.115 கோடிக்கு வாங்கி கேப்டன் பதவி அளித்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும், புதிதாக கேப்டன் பதவியை ஏற்ற ஹார்திக் பாண்டியாவிற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். ஹர்திக் பாண்டியா பலமுறை மைதானத்தில் ரசிகர்களின் எதிர்ப்பை சந்தித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும், ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும் பல ட்ரோல்கள் செய்யப்பட்டன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்களுமே ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும், ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும் இருந்தார்கள் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இதில் பந்து வீச்சாளரான பும்ரா மட்டும் யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.
நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தோம்..
இந்நிலையில் பும்ரா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது, இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது பேசிய அவர்,
"நம் நாட்டைப் பொறுத்தவரை எப்பொழுதும் உணர்ச்சிகள் விவாத பொருளாகவே இருக்கும். அதிலும் ரசிகர்களும், வீரர்களும் கூட சில நேரங்களில் உணர்ச்சிகரமாக இருப்பார்கள். ஆனால் இந்த எமோஷன் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது எங்களை பாதிக்காது. ஆனால் குறிப்பிட்ட அணிக்காக விளையாடும் பொழுது சொந்த ரசிகர்களே எதிர்த்தால் என்ன செய்ய முடியும். அவ்வாறு எதிர்த்துக் கொள்ளும் பொழுது நாம் நம் மீது கவனம் செலுத்த தான் முடியுமே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது. மேலும் இதனை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என நாம் வீரர்களிடம் சொன்னாலும் நிச்சயம் அது சாத்தியமில்லை. ஏனென்றால் ரசிகர்களின் எமோஷன் நிச்சயம் வீரரை பாதிக்கும். ஆனால் ஒரு அணியாக நாங்கள் எப்பொழுதும் எதிர்ப்பை ஆதரிக்க மாட்டோம். அந்த சமயத்தில் நாங்கள் பாண்டியாவுடன் தொடர்ந்து பேசி வந்தோம். ரோகித் சர்மாவும் அவருக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இந்த எதிர்ப்பு எல்லாம் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு மாறிவிட்டது. எனவே ரசிகர்களின் எதிர்ப்பை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஒரு வீரரை ரசிகர்கள் எதிர்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே விளையாட்டு வீரர்களின் வாழ்வில் இது ஒரு அங்கம். மேலும் பாண்டியா உடன் இணைந்து நாங்கள் விளையாடி இருக்கிறோம். அவருக்கு உதவி என்றால், நாங்கள் அனைவரும் தயாராக இருப்போம்"
என தெரிவித்துள்ளார்.