தற்காப்பு கலை டூ துப்பாக்கிச் சுடுதல்: மனு பாகரின் வெற்றிப்பாதை இதோ!

Manu Bhagar
Manu Bhagar
Published on

விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே ஆகச் சிறந்த கனவாக இருக்கும். அவ்வகையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கணக்கைத் தொடங்கி வைத்து கனவை மெய்ப்பித்துள்ளார் மனு பாகர். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர் அவர்களின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்தப் பதிவு.

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள கோரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த மனு பாகர், தனது தொடக்க காலத்தில் ஒரு தற்காப்புக் கலை வீராங்கனையாக இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம்,14 வயது வரை துப்பாக்கிச் சுடுதல் குறித்த எந்தப் பயிற்சியும் இவர் பெற்றதில்லை. மணிப்பூர் மாநிலத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஹுயன் லாங்லான் என்ற தற்காப்புக் கலை மீது தான் தனது முழு ஆர்வத்தையும் செலுத்தினார் மனு பாகர். இவரது தந்தையான ராம் கிஷண் பாகர், மெர்ச்சண்ட் நேவி பிரிவில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர்.

தற்காப்புக் கலையைத் தனது உயிருக்கு உயிராக நேசித்த மனு பாகர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இது மட்டுமின்றி, ஸ்கேட்டிங், டென்னிஸ் மற்றும் குத்துச்சண்டை போன்ற போட்டிகளிலும் பங்கேற்று பல வெற்றிகளை குவித்துள்ளார். பல போட்டிகளில் களம் கண்ட இவருக்கு தனது 14 வது வயதில் துப்பாக்கிச் சுடுதல் மீது ஆர்வம் வந்தது. இதனைப் புரிந்து கொண்ட இவரது தந்தை பச்சைக் கொடி காட்டியது மட்டுமின்றி, பயிற்சிக்காக ரூ.1.5 இலட்சத்தையும் அளித்தார்.

ஆர்வ மிகுதியால் துப்பாக்கிச் சுடுதலை வெகு விரைவாக கற்றுக் கொண்ட பாகர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை எட்டிப் பிடித்தார். அதே ஆண்டில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதலில் 9 தங்கப் பதக்கங்களை தட்டிப் பறித்தார். ஒரு வருடப் பயிற்சியில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பாகர், தனது பயிற்சியால் பல பதக்கங்களை வென்று குவித்தார்.

ஜூனியர் உலகக்கோப்பையில் 4 தங்கம் மற்றும் 1 வெண்கலம், இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி, காமன்வெல்த்தில் 1 தங்கம், ஆசிய விளையாட்டில் 1 தங்கம் மற்றும் உலகக்கோப்பையில் 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி என இவரது பதக்க பட்டியல் நீள்கிறது. வெற்றிப்பாதையில் பதக்கங்களைக் குவித்த மனு பாகர், கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியைச் சந்தித்தார்.

இதையும் படியுங்கள்:
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை!
Manu Bhagar

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை; ஆதலால் மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், ஒலிம்பிக் நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் பதக்க வாய்ப்பைத் தவற விட்ட மனு பாகர், மன உளைச்சலுக்கு ஆளாகி சிறிது நாட்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியையே மேற்கொள்ளாமல் இருந்தார். இருப்பினும் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா, மனு பாகரைத் தேற்றி மீண்டும் பயிற்சிக்கு அழைத்து வந்தார். பயிற்சியாளரின் முயற்சியும், மனு பாகரின் பயிற்சியும் வீணாகவில்லை என்பதை தற்போது நிரூபித்து விட்டார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 10மீ ஏர் பிஸ்டலில் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மனு பாகர். மேலும் இவர் 25மீ ஏர் பிஸ்டல் மற்றும் 10மீ ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவிலும் பங்கேற்க இருப்பதால், பதக்க எண்ணிக்கையை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com