

19-வது ஐபிஎல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் 16-ந் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இதனால் அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது உறுதியாகியுள்ளது.
மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் மேக்ஸ்வெல் பெயரை பதிவு செய்யாதது அந்த அணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் மேக்ஸ்வெல் இந்தாண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரரான 37 வயதான மேக்ஸ்வெல், கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்தளவுக்கு விளையாடவில்லை. பார்ம்அவுட், அடுத்தடுத்து காயம் காரணமாக கடந்த ஐபிஎல் போட்டியில் கூட பாதியில் விலகினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு இது. இந்த லீக் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது என்ற நன்றியுணர்வுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் லீக், என்னை ஒரு கிரிக்கெட் பிளேயராகவும், ஒரு நல்ல மனிதராகவும் உருவெடுக்க உதவியதாகவும், ஐபிஎல் தொடரின் மூலம் பல உலக தரம் வாய்ந்த பிளேயர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றது அதிர்ஷ்டம் என்றும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். மேலும், நான் விளையாடிய எல்லா அணிகளும், ரசிகர்களின் அந்த ஆரவாரமான உற்சாகமும் என்றென்றும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.