இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆடுகளத்தை பார்வையிடுவதில்லை. இதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் காரணம் முன்கூட்டியே ஆடுகளத்தைப் பார்த்து இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டாம் என்பது. இரண்டாவது காரணம் பந்துவீசுவதற்கு இந்த ஆடுகளம் எப்படிப்பட்டது என்பதை என்னால் சரியாக கணிக்க முடியாது அதனால்தான் ஆடுகளத்தை பார்வையிடுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். 7 போட்டிகளில் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பொதுவாக அணியின் பந்துவீச்சாளர்கள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்தவுடன் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பது வழக்கம். ஆனால், நான் பந்துவீச்சுக்கு முன்னர் ஆடுகளத்தை பார்வையிடுவதே இல்லை. பந்து வீசினால்தான் ஆடுகளம் எப்படி என்று தெரியவரும். முன்னதாகவே ஆடுகளத்தை பார்த்து தேவையில்லாமல் இரத்த அழுத்தத்தை அதிகரிதுக் கொள்ள வேண்டாமே என்றுதான் நான் ரிலாக்ஸாக இருந்து விடுகிறேன். அப்படிச் செய்தால் நாம் நமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தலாம் என்கிறார் முகமது ஷமி.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி முதலில் இடம்பெறவில்லை. புனேயில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததை அடுத்து அவருக்கு பதிலாக ஷமியை தேர்ந்தெடுத்தனர்.
தர்மசாலாவில் நியூஸிலாந்து எதிரான போட்டியில் ஷமி சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பிறகு அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்றார்.
தொடர்ந்து அணியில் இருக்கும்போது நாம் மனதளவில் பலமானவர்களாக இருக்க வேண்டும். சில சமயங்களில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனினும் அணி சரியான திசையில் சென்று வெற்றியை குவிக்கும்போது நமக்குள் ஒரு திருப்தி ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.
நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். ஒருநாள் சர்வதேச போட்டியில் குறைந்த ரன்களுக்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த ஸ்டூவர்ட் பின்னியின் 9 ஆண்டு கால சாதனையையும் ஷமி முறியடித்துள்ளார்.
மேலும் ஒருநாள் சர்வதேச போட்டியில் 50 விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் டேவிட் வார்னரின் விக்கெட்டை சாய்த்தது ஷமிதான். ஆனாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.