இன்ஸ்டாகிராமில் mahi77i2 என்ற போலி பக்கத்தைப் பயன்படுத்தி ஒருவர் தான் எம்.எஸ். தோனி என்று கூறி பண மோசடி செய்ய முயற்சித்த ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டிஜிட்டல் உலகத்தில் வாட்ஸப், ஃபேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒருபக்கம் AI தொழில்நுட்பத்தால் ஒருவரை தவறாக சித்தரித்துப் பதிவிடுவது, மற்றொரு பக்கம் ஆன்லைன் விற்பனையில் ஆர்டர் செய்யாத பொருள்களுக்கு காசு வாங்கி ஏமாற்றுவது என டிஜிட்டல் உலகத்தில் மோசடி சம்பவங்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகின்றன. இதற்காக பல வழிகளில் விழிப்புணர்வு செய்யப்பட்டுதான் வருகின்றது என்றாலும், சிலர் எளிதாக மோசடியில் சிக்கி பணத்தை இழக்கின்றனர். அந்தவகையில், தற்போது எம்.எஸ்.தோனியே 600 ரூபாய் பணம் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ஒரு நபரிடம் கேட்டிருக்கிறாராம். ஆம்! பண மோசடி முயற்சிதான்.
எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் பிஸியாக உள்ள இந்த சமயத்தில் அவரைப் போலவே மெசேஜ் செய்து ஒருவர் ஆள்மாறாட்டம் செய்திருக்கிறார். mahi77i2 என்ற ஒரு போலி கணக்கை உருவாக்கி, அதன்மூலம் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து பணம் கேட்டுள்ளார். அதாவது, “ஹாய்… நான் எம்.எஸ்.தோனி, நான் Private Account லிருந்து உங்களுக்கு மெசேஜ் செய்கிறேன். நான் ராஞ்சியில் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எனது பர்சை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டேன். தயவுசெஞ்சு 600 ரூபாய் போன் பேயில் அனுப்பிவிடுங்கள். வீட்டிற்கு சென்றதும் உங்களுக்கு திரும்பத் தருகிறேன்.” என்று மெசேஜ் செய்துள்ளார்.
மேலும், தனது கருத்தை நிரூபிக்கும் விதமாக, தோனியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வசனமான ‘விசில் போடு’ என்பதையும் சேர்த்து பதிவிட்டிருக்கிறார். அந்த நபர் மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து காட்டுத்தீ போல பரவிய இந்த ஸ்க்ரீன் ஷாட், தற்போது வரை மில்லியன் கணக்கானப் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டோவிற்கு கேலியாக பல கமென்ட்களை செய்து வருகின்றனர். அதேபோல், மோசடி நபரை கண்டித்தும் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.