IPL 2024: இன்று ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி இன்று 250வது போட்டியில் களமிறங்கி சாதனைப் படைக்கவுள்ளது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் 41 வது போட்டியில் இன்று பெங்களூரு மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிக்கொண்டதில், ஹைத்ராபாத் அணி 287 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், மற்ற அணிகளை விட ஹைத்ராபாத் அணி வலுவான ரன்களை குவித்து, எதிரணிகளை திக்குமுக்காடச் செய்து வருகிறது.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் எடுக்கும் அணியாகவும், தொடர்ந்து 250 ரன்களுக்கு மேல் எடுக்கும் அணியாகவும் மற்ற அணிகள் செய்ய முடியாத பல சாதனைகளை ஹைத்ராபாத் அணி நிகழ்த்தி வருகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஹைத்ராபாத் அணி 287 ரன்கள் எடுத்ததுதான், அதிக ரன்களாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணி, ஹைத்ராபாத் அணியுடன் இன்று மோதவுள்ளது. ஆனால், பெங்களூரு அணி எப்போது ஃபார்ம் இன் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, இந்த மோதல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே பெங்களூரு அணி இதுவரை 249 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில், பெங்களூரு அணி 117 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல் 128 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகள் ட்ரா செய்துள்ளது. இதனையடுத்து இன்று, பெங்களூரு அணி தனது 250வது போட்டியை விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்தாலும் கூட, பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான போட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அணியாக 250 போட்டிகளை எட்டியுள்ளது பெங்களூரு அணி. மும்பை அணி இதுவரை 255 போட்டிகளில் விளையாடி 250 போட்டிகளை கடந்து விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
அதேபோல் இதுவரை, சென்னை அணி 233 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 240 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 244 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 214 போட்டிகளிலும் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 200க்கும் குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.