'பௌலர்களின் ரோல்ஸ் ராய்ஸ்' - பாராட்டும் தென்னாப்பிரிக்க வீரர்!

Mayank Yadav
Mayank Yadav
Published on

இந்தியாவில் ஆண்டுதோறும் பிசிசிஐ சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டுதோறும் சில புதிய வீரர்கள் அறிமுகமாகி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதல் போட்டியிலேயே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். யார் அந்த இளம் வீரர் பார்க்கலாம் வாங்க!

நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ ஜெயன்ட்ஸ் அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கினார் மயங்க் யாதவ். ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் இரண்டு போட்டிகளிலும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். 145 முதல் 155 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசிய மயங்க் யாதவ், பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். எதிரணியினர் இவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர்.

இவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கு சிறப்பாக பங்காற்றினார். இதில் அதிகபட்சமாக 157.6 கிமீ வேகத்தில் பந்து வீசி சாதனையும் படைத்தார். இருப்பினும் துரதிருஷ்டவசமாக காயமடைந்து தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார். காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடிய போது, முதல் ஓவரிலேயே மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.

இவருடைய வேகம் அபாரமாக உள்ளது என பலரும் பாராட்டிய நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கல், லக்னோ அணியின் ரோல்ஸ் ராய்ஸ் இவர் எனப் பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் மிகச்சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தற்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் பந்துவீச்சு பயிற்சியாளர் கிடையாது. ஆனால், லக்னோ அணியில் மோர்னே மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். அப்போது வலைப்பயிற்சியில் மயங்க் யாதவின் வேகத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார். தென்னாப்பிரிக்க அணியில் ஆலன் டோனால்டை நாங்கள் ரோல்ஸ் ராய்ஸ் என்று புகழ்வோம். அதே போல் இந்தப் பையன் 'பௌலர்களின் ரோல்ஸ் ராய்ஸ்' என்று மோர்னே மோர்கல் புகழ்ந்து பேசினார். இந்தப் பையன் காயத்தால் அவதிப்பட்டாலும், அதிலிருந்து மீண்டு அணியுடனேயே இருந்தார். இதனால், லக்னோ அணி உரிமையாளர்கள் மயங்க் யாதவை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். ஏனெனில் இளம் வயதிலேயே அதிகத் திறமைகள் கொண்ட வீரராக மயங்க் யாதவ் இருக்கிறார். இவரது திறமையை நாங்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
"தமிழ்நாட்டின் ஜான்டி ரோட்ஸ் இவர் தான்"- அஸ்வின் பாராட்டு!
Mayank Yadav

மயங்க் யாதவின் வேகமான பந்துவீச்சைக் கண்டு இவரை டி20 உலகக்கோப்பை அணியிலும், ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டும் என அப்போதே கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். ஆனால், காயம் இவரை விளையாட விடாமல் தடுத்து விட்டது. இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் காயங்களைத் தகர்த்தெறிந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பார் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com