

விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரையில் அதிக போட்டிகளில் பங்கேற்பது என்பது , எண்ணிக்கையை பொருத்த விஷயம் அல்ல. ஒருவர் அதிக போட்டியில் களம் இறங்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த விளையாட்டில் தன்னை நிரூபித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக அணியில் பங்கேற்பதற்கு , அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படுவார். அதனால் அதிக போட்டிகளில் பங்கேற்பது, ஒருவரின் விளையாட்டுத் திறன் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது பொருள். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்ற டாப் 5 வீராங்கனைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
1. ஹர்மன்பிரீத் கவுர் (இந்தியா): 200 போட்டிகள்
2009-ல் அறிமுகமான ஹர்மன்பிரீத் கவுர் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்டராக கொலோச்சி வருகிறார். இந்திய அணியின் இக்கட்டான பல நேரங்களில் பொறுப்பை தன் தோளில் சுமந்து அணியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்திய அணியின் நீண்ட கால கனமான ஒரு நாள் உலக கோப்பையை பெற்றுத் தந்து சாதனை செய்தவர் ஹர்மன். அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை 200 டி20 போட்டிகளில் விளையாடி 4147 ரன்களை குவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் சதம் அடித்த ஒரு சில வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
2. சூசி பேட்ஸ் (நியூசிலாந்து): 184 போட்டிகள்
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான சூசி பேட்ஸ் மிகச் சிறந்த அனுபவசாலியாக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 184 டி20 போட்டிகளில் பங்கேற்று 4739 ரன்களை குவித்துள்ளார். ஒரு சதம் மற்றும் 28 அரை சதங்களை அடித்துள்ளார். 2024 டி 20 உலகக் கோப்பை வென்ற நியூசிலாந்து அணியில் எனது பங்களிப்பு அதிகம் உள்ளது.
3. டானி வயட்-ஹாட்ஜ் (இங்கிலாந்து): 183 போட்டிகள்
மிகவும் அதிரடியாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர் டானி வயட்-ஹாட்ஜ் . டி 20 போட்டிகளில் 3 சதமடித்த ஒரே வீராங்கனை என்ற பெருமையை வைத்திருக்கிறார். உலகின் மிகச் சிறந்த தொடக்க வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுகிறார். 183 டி20 போட்டிகளில் விளையாடி 3497 ரன்கள் எடுத்துள்ளார். 21 அரை சதங்களும் அடித்துள்ளார்.
4. எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா): 177 போட்டிகள்
தற்போதைய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்று உலகப் புகழ்பெற்றவர் எல்லிஸ் பெர்ரி. பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி அணியினை வெற்றி பெற வைப்பார். 177 போட்டிகளில் விளையாடி 2,353 ரன்கள் மற்றும் 129 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா பல முறை வென்ற உலகக் கோப்பை போட்டிகளில் எல்லிஸ் பங்களிப்பும் உள்ளது.
5. ஸ்மிருதி மந்தனா (இந்தியா): 168 போட்டிகள்
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஆன ஸ்மிருதி மந்தனா சர்வதேச அளவில் மிகச் சிறந்த பேட்டராக அறியப்படுகிறார். 168 போட்டிகளில் பங்கேற்று 4475 ரன்களை குவித்துள்ளார். தற்போது டி 20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ள அவர் , விரைவில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக முதல் இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.