
இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக வலம் வருபவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தோனி, பல வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவரது புகழ் மற்றும் செல்வாக்கு எப்போதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. ரசிகர்களால் ‘தல’, ‘கேப்டன் கூல்’ என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் தோனி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஸ்டார் ஆக வலம் வருகிறார்.
தோனி கிரிக்கெட்டை தாண்டி பைக் மற்றும் கார், ராணுவம், விவசாயம், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் ஆர்வம் கொண்டவர். இதனால் அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு தோனிக்கு, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டது. வான்வெளி தொழில்நுட்பங்களில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வரும் தோனி தற்போது கருடா ஏரோஸ்பேஸிடமிருந்து முறையான பயிற்சி பெற்ற ட்ரோன் விமானியாக உரிமம் பெற்றுள்ளார். இது அவரது விளையாட்டு வாழ்க்கையை தாண்டி, புதிய தொழில்நுட்பங்களில் அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றான சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனம்(DGCA), அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களின் மேற்பார்வையின் கீழ் 2,500க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. அதில் பங்கேற்று முறையான பயிற்சி பெற்ற தோனி ட்ரோன் பைலட் உரிமத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளார். இந்தச் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட தோனி, ‘டிஜிசிஏ ட்ரோன் பைலட் சான்றிதழ் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தோனி இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது ரசிகர்கள் #DhoniDronePilot என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த சாதனை, தோனியின் ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.
ட்ரோன் விமானியாக உரிமம் பெற்றதன் மூலம் தல அஜித்தை போல் தோனியும் இந்த சான்றிதழை பெற்ற பிரபலம் என்ற பெயரை பெற்றுள்ளார்.
தல அஜித் சினிமாவை தாண்டி கார் ரேசில் சாதித்து வருவதை போல் தோனியும் கிரிக்கெட்டை தாண்டி தனக்கு விருப்பமான விஷயங்களில் கவனம் செலுத்தி சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்.