
தோனி என்ற பெயரை கேட்டாலே கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். மகேந்திர சிங் தோனி, சுருக்கமாக எம் எஸ் தோனி என்று அறியப்படும் இவர் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படுகிறார். சச்சினுக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக திகழ்ந்தவர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். பதற்றமான சூழலில் கூட செம கூலாக விளையாடுவது, ஜெயிக்க முடியாத போட்டியில் அணியை உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைப்பது என அவரின் முடிவுகளுக்கும் கூட இங்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் இதனாலேயே தோனியை ‘கேப்டன் கூல்’ என்றே ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே அதற்குக் காரணம்.
இப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி கடந்த 2015-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்தும், 2019-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தற்போது தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 15 ஆண்டுகளாக வலம் வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 538 சர்வதேச போட்டிகளில் ஆடி 17,266 ரன்கள் எடுத்து இருப்பதுடன், விக்கெட் கீப்பிங்கில் 829 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
இந்நிலையில் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து, 'ஹால் ஆப் பேம்' விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.
அதனை தொடர்ந்து ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்தது. தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஹால் ஆப் பேமில் இடம்பெறுவது ஒரு கௌரவம்.
இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார். அந்த வகையில், எம்.எஸ்.தோனி 11வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய வீரர்களில் ஏற்கனவே பிஷன்சிங் பெடி, கபில்தேவ், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், கும்பிளே, வினோ மன்கட், ஷேவாக், சச்சின் தெண்டுல்கர், ஆகியோர் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளனர்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.