

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ். தோனி அவர்களின் புதிய அறிவிப்பு, அவரது ரசிகர்களை கவலையுர செய்துள்ளது. வருகிற 2027 ஐபிஎல் தொடரில் எம்எஸ்.தோனி , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக பதவி ஏற்க உள்ளார் என்று , அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
கேப்டன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணியை மாற்றியதில் தோனியின் பங்கு மிகவும் அதிகம் என்பதை அனைவரும் அறிவர். இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக செயல்பட்ட தோனி , ஐபிஎல் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நீண்ட காலம் நிலைநிறுத்தி இருந்தார்.
இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தோனி 5439 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் 24 அரைசதங்கள் அடித்து இருந்தாலும் 137.45 ஸ்டிரைக் ரேட்டையும் , 38.30 சராசரியையும் பெற்றிருந்தார். ஆயினும் ஐபிஎல்லில் 84 ரன்களே அவரது அதிகபட்ச ரன்னாக இருந்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் தோனி கேப்டனாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரச்சனைகளில் சிக்கி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தது.
அந்த காலகட்டத்தில் தோனி புனே சூப்பர் ஜெயன்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். ஆனாலும் அவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. சென்னை அணிக்காக விளையாடியதால் கேப்டன் தோனி மீது தமிழர்களின் அன்பு அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தோனியின் புகழ் பரவி இருந்தது.
யாரும் எதிர்பாராத நேரங்களில் மிகவும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்வதிலும் , அதிவேக விக்கெட் கீப்பராகவும் , இக்கட்டான நேரங்களிலும் நிதானமாக முடிவு எடுத்து வெற்றியை நோக்கி அணியை கொண்டு செல்லும் அவரது நிர்வாக திறமை ஆகியவை அவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது. மேலும் ஆட்டத்தின் போது பெரும்பாலும் பதட்டம் இன்றி காணப்படுவதால் 'கேப்டன் கூல்' என்ற பட்ட பெயரும் அவருக்கு வந்தது.
சிஎஸ்கே அணியின் உரிமையாளரான சீனிவாசன் தோனியின் ஓய்வு குறித்து பேசும்போது , "தோனி இன்றி சிஎஸ்கே அணியை நினைத்து கூட பார்க்க முடியாது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகால பயணத்தில் , பெரிய வெற்றிகள், சவாலான தோல்விகள் என அனைத்து தருணங்களிலும் நாங்கள் இணைந்து பயணித்தோம். பரஸ்பர நம்பிக்கை எங்களுக்குள் பிணைப்பை அதிகரித்தது , நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது இல்லை. இந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் எங்கள் வெற்றிக்கு காரணமாக இருந்தது .
2008-ஆம் ஆண்டு ஏலத்திலிருந்து நான் தோனி சென்னை அணியில் இருக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்தேன். அவர் பெற்றுக் கொடுத்த கோப்பைகளுக்கு மட்டுமல்லாமல் , அவரது சிறந்த குணங்களுக்கும் சேர்த்து, நான் எடுத்தது சிறந்த முடிவு என்பதை உணர்ந்து கொண்டேன்," என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனும் தோனியை பாராட்டி அறிக்கை வெளியிட்டு அவரது ராஜினாமாவை உறுதி செய்துள்ளார். தோனியின் ஓய்வு முடிவினால் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் X தளங்களில் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.