
64-வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்தது. உலக தடகள சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா) உள்பட 9 வீரர்கள் பங்கேற்றனர். இதில் நீரஜ் சோப்ரா தனது 3-வது முயற்சியில் அதிகபட்சமாக 85.29 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தென்ஆப்பிரிக்க வீரர் டோவ் சுமித் 84.12 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தையும், முன்னாள் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3-வது இடத்தையும் ( 83.63 மீட்டர்) பிடித்தனர்.
அரியானாவை சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா கடந்த மாதம் தோகாவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், கடந்த 20-ந் தேதி பாரீசில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் 88.16 மீட்டர் தூரம் எறிந்து முதலிடமும் பிடித்து இருந்தார்.
அவர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஒரு முறை பட்டம் வென்றுள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொள்கிறார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா கூறுகையில், ‘எனது இன்றைய செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது கோல்டன் ஸ்பைக் போட்டியை பலமுறை பார்த்துள்ளேன்.
ஈட்டி எறிதல் ஜாம்பவான் ஜன் ஜெலென்சி (தற்போது நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர்), ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஆகியோர் இந்த போட்டியில் பட்டம் வென்றதை பார்த்து இருக்கிறேன் அவர்களை போல் நானும் இங்கு மகுடம் சூட வேண்டும் என்று விரும்பினேன். அந்த கனவு தற்போது நனவாகி இருக்கிறது. ஈட்டி எறிதல் பந்தயம் செக்குடியரசில் மிகவும் பிரபலமானது என்பது எனக்கு தெரியும். பார்வையாளர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அவர்களுக்காக நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்’ என்றார்.