மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், தனது 29வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் தனது ஓய்வு முடிவை பூரன் உறுதிப்படுத்தினார். "மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியையும், மறக்க முடியாத நினைவுகளையும் அளித்துள்ளது. அணிக்குத் தலைமை தாங்கியது என் இதயத்திற்கு நெருக்கமானது" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அறிமுகமான பூரன், குறுகிய காலத்திலேயே டி20 கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனைகளை பூரன் படைத்துள்ளார். 106 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2,275 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 61 போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள் உட்பட 1,983 ரன்கள் எடுத்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பூரன், இனி உலகளாவிய டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளார் எனத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பூரனின் இந்த முடிவு, சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம், பூரனின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்து, "அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர் மற்றும் ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர். களத்தில் அவரது ஆட்டமும், அணியில் அவரது தாக்கமும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று புகழாரம் சூட்டியுள்ளது. பூரனின் இந்த திடீர் ஓய்வு, மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20 திட்டங்களுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.