

கிட்ட தட்ட 150 வருடங்கள் ஆன, 2615 டெஸ்டுக்களுக்கு மேல் விளையாடப்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற்றுள்ளன.
அவற்றில் குறிப்பாக சதம் எடுத்த நைட் வாட்ச்மன் பவுலர்களின் சாதனைகள் குறித்து காண்போம்.
நைட் வாட்ச்மன் இடத்தில் களம் இறங்கிய பவுலர்கள்.... ஒரு பாகிஸ்தான் மற்றும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் தான் ஒரே ஒரு சதம் டெஸ்டுக்களில் எடுத்துள்ளனர்.
அதில் ஒரு வீரரின் சதம் சாதனை அவரது அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரவில்லை.
அதே சமயத்தில் இந்த மூவரும் முக்கியமாக பவுலர்கள். இவர்கள் மூவர்களும் ஒரு சதத்திற்கு மேல் டெஸ்டில் எடுத்தது கிடையாது.
இவை ஒற்றுமை.
இவர்களில் ஒருவர் இரட்டை சதம் எடுத்து அசத்தியவர் அதுவும் அவரது கடைசி டெஸ்டில்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் நைட் வாட்ச்மன் நாசிம்-உல்-கானி!
1962 - நாசிம்-உல்-கானி
லார்ட்ஸ் டெஸ்ட். (21-23, ஜூன் 1962)
இரண்டாவது இன்னிங்சில் நைட் வாட்ச்மன் ஸ்தானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பேட்டிங் ஆட வேண்டிய சந்தர்ப்பம் பாகிஸ்தான் ஸ்பின் பவுலர் நாசிம்-உல்-கானிக்கு கிடைத்தது.
நன்கு பயன் படுத்திக் கொண்ட இவர் ஒரு சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்த ரன்கள் 101.
ஆம் சதம் எடுத்தார். இவர் தான் முதல் முதலில் சதம் பதிவு செய்த நைட் வாட்ச்மன் என்ற சாதனை, டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.
இவரது அணி கேப்டன் ஜாவேட் புர்கியுடன் ஜோடி சேர்ந்து (அவர் எடுத்ததும் 101 ரன்கள்) பார்ட்னர்ஷிப்பில் 197 ரன்களை அணிக்கு சேர்த்தனர்.
இருந்தும் நாசிம்-உல்-கானியின் பங்களிப்பு, முயற்சி பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற்று தர இயலவில்லை.
ஸ்கோர்
பாகிஸ்தான் அணி 100 மற்றும் 355,
இங்கிலாந்து அணி 370 மற்றும் 86/1
இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.
நாசிம்-உல்-கானி அந்த கால கட்டத்தில் மிக இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர் - 16 வயது 248 நாட்கள் பிரட்ஜ்டவுன் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட டோனி மன்னின் வரலாற்றுச் சதம்!
1977 - டோனி மன்
பெர்த் டெஸ்ட் (16-21, டிசம்பர், 1977)
டோனி மன் விளையாடியது மொத்தம் 4 டெஸ்டுக்கள் மட்டுமே. அதுவும் ஒரே தொடரில் இந்திய அணிக்கு எதிராக.
இந்த ஆஸ்திரேலிய வீரர் இடது கையினால் பேட்டிங் விளையாடினார். வலது கையால் லெக் பிரேக் போட்ட ஸ்பின் பவுலர்.
டெஸ்டுகளில் முக்கியமாக இவரது பவுலிங் திறமைக்காக இடம் பிடித்ததவர்.
4 டெஸ்டுக்களில் இவர் எடுத்த மொத்த ரன்கள் 189. அதில் ஒரே ஒரு சதம்.
பவுலிங்கில் மொத்தம் எடுத்தது 4 விக்கெட்டுக்கள். ஆனால் 4 விக்கெட்டுக்கள் எடுக்க மொத்தம் விட்டுக் கொடுத்த ரன்கள் 316.
இவர் அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்சில் எடுத்தது 3/12.
குறிப்பிட்ட டெஸ்டின் நான்காவது இன்னிங்சில் நைட் வாட்ச்மன் ஸ்தானத்தில் களம் இறக்கப்பட்ட டோனி மன், 165 பந்துக்கள் எதிர் கொண்டு நின்று பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடி 10 பவுண்டரிகள் உதவியுடன் சதம் எடுத்து அசத்தினார். அவர் எடுத்த ரன்கள் 105.
அந்த குறிப்பிட்ட தருணத்தில் நைட் வாட்ச்மன் டோனி மன்னின் இந்த சதம் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வெற்றி பெற பெரிதும் உதவியது என்றால் மிகையாகாது.
இவர் தான் வெற்றி பெற்ற அணியில் சதம் எடுத்த முதல் நைட் வாட்ஸ்மன் ஆனவர் என்ற பெருமை பெற்றவர்.
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து மிரட்டிய ஜேசன் கில்லஸ்பி!
2006 - ஜேசன் கில்லஸ்பி
சட்டோக்ராம் (16-20, ஏப்ரல் 2006)
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்த ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் இரட்டை சதம் பதிவு செய்து சாதித்தார்.
ஜேசன் கில்லஸ்பி ஆஸ்திரேலிய அணியின் ஒரே இன்னிங்சில் நைட் வாட்ச்மன் ஆக களம் இறங்கி இதை சாதித்தார்.
இவர் எடுத்த ரன்கள் 201* நாட் அவுட். எதிர் கொண்ட பந்துக்கள் 425. இரண்டு சிக்ஸர்கள். 26 பவுண்டரிகள்.
இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ச் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
71 டெஸ்ட்கள் ஆடியுள்ள ஜேசன் கில்லஸ்பி 259 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மொத்தம் எடுத்த ரன்கள் 1218.
இவர் எடுத்த ஒரே டெஸ்ட் சதம் இந்த இரட்டை சதம் மட்டும் தான்.
அது மட்டும் அல்லாமல் இந்த டெஸ்ட் தான் இவருடைய கடைசி டெஸ்டாகவும் அமைந்தது.
முதல் இன்னிங்சில் பவுலிங்கில் இவர் எடுத்தது 3/11 ஆகும்.
ஜஸ்ட் மிஸ்ட்
இந்த மூன்று சதங்கள் குவித்து சாதனை புரிந்த நைட் வாட்ச்மன் பவுலர்கள் தவிர டெஸ்டில் நுனி இழையில் சதம் எடுக்க தவறிய முக்கிய பவுலர் நைட் வாட்ச்மன் ஆக விளையாடிய ஹரோல்டு லார்வுட் ஆவார்.
1933 - ஹரோல்டு லார்வுட் (23-28, பிப்ரவரி, 1933)
புகழ் பெற்ற பாடிலைன் தொடரில் (Bodyline Series) இங்கிலந்து அணியின் வேக பந்து வீச்சாளர் 33 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹரோல்டு லார்வுட் அவருடைய அணி கேப்டன் டவுகிளாஸ் ஜார்டின் கூறிய கட்டளைகளை வேத வாக்காக பின் பற்றி வேக பந்துக்களை லெக் சைடில் செல்லும் மாறு வீசி ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து கதிகலங்க வைத்தார் என்பது வரலாற்றில் அழியா இடம் பெற்ற ஒன்றாகும்.
இவரது குறி தவறா பவுலிங்கும் எடுத்த விக்கெட்டுக்களும் இங்கிலாந்து அணி இந்த அஷஸ் தொடரில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்ததும் மறுக்க, மறக்க முடியாத உண்மையாகும்.
இந்த வேக பந்து வீசுபவர் நைட் வாட்ச்மன் ஆக தொடரின் கடைசி டெஸ்ட் சிட்னி மைதானத்தில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இறங்கி அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவித்தார். ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகள் உடன் 148 பந்துக்கள் எதிர் கொண்டு இவரது ஒரே சதத்தை டெஸ்டில் எடுக்கும் அளவிற்கு நெருங்கி விட்டார். ஆனால் நுனி இழையில் தவற விட்டார். இவர் எடுத்த ரன்கள் 98.
இருந்தும் இது தான் இவரது அதிக பட்ச டெஸ்ட் ஸ்கோர். (98 ரன்கள்)
21 டெஸ்டுகளில் 28 இன்னிங்ஸ்களில் பேட்டிங் விளையாடிய ஹரோல்டு லார்வுட் மொத்தம் எடுத்த ரன்கள் 485.
இவர் மொத்தம் 36 இன்னிங்ஸ்களில் பந்துக்கள் வீசி வீழ்த்திய விக்கெட்டுக்கள் 78.
இவர் நைட் வாட்ச்மன் ஆக களம் இறங்கிய இந்த தொடரின் கடைசி சிட்னி டெஸ்ட் தான் ஹரோல்டு லார்வுடின் கடைசி டெஸ்ட் ஆகவும் அமைந்தது குறிப்பிட தக்கது.
இந்த டெஸ்டில் இவர் 5 விக்கெட்டுக்கள் எடுத்தார். அதில் 4 முதல் இன்னிங்சில். சதம் தவற விட்டாலும் பவுலர் நைட் வாட்ச்மன் ஆக ஆடி ரன்கள் குவித்து அவரது அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற பெரிதும் உதவிய ஹரோல்டு லார்வுட் சாதனை தனி மகத்துவம் பெற்றுள்ளது.